Malaysia

செரி கெம்பாங்கான் மொத்தச் சந்தையில் பயங்கர தீ விபத்து; 2,000 மீத்தேன் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பரபரப்பு

தி. கிரிஷன்

செர்டாங், ஜூலை 24 — சிலாங்கூர் செரி கெம்பாங்கானில் உள்ள மொத்தச் சந்தை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 மீத்தேன் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் சவால்களை எதிர்கொண்டனர். சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த ஐந்து தீயணைப்பு நீரேற்றிகள் (ஹைட்ரன்ட்கள்) தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்ததால் செயல்படாத நிலையில் இருந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார். இதனால், தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட நீரையே முழுமையாக நம்பியிருந்ததாக அவர் கூறினார். நேற்று இரவு சுமார் 10.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. பலத்த காற்று வீசியதால் தீ வேகமாகப் பரவியது. தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்தே தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் JBPM-ஐச் சேர்ந்த 68 தீயணைப்பு வீரர்களும், 67 தன்னார்வ தீயணைப்பு படை உறுப்பினர்களும் ஈடுபட்டனர். செலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவைச் சேர்ந்த 15 தீயணைப்பு நிலையங்களிலிருந்து 19 வாகனங்கள் களமிறக்கப்பட்டன. தீ விபத்தின் தொடக்க கட்டத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அஷ்ருல் ரீசால் தெரிவித்தார். இருப்பினும், தீ அதிகமாகப் பரவுவதற்கு முன்பே அதிகாலை 1.20 மணியளவில் அதை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button