
சிலாங்கூரில் கால்நடைப் பண்ணைகளுக்கு மாற்று நிலம் வழங்க மாநில மந்திரி புசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச உரிமை கட்சியின் தலைவர் சேகர் வலியுறுத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மே 29-
சிலாங்கூரில் கால்நடைப் பண்ணைகளுக்கு மாற்று நிலம் வழங்க
மாநில மந்திரி புசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச உரிமை கட்சியின் தலைவர் சேகர் வலியுறுத்தியுள்ளார்.
தோட்டங்களில் பல இடங்களில் ஆடு, மாடு என கால்நடைகளை வளர்த்த அதன் உரிமையாளர்கள் அந்த இடத்தை தற்காத்து வந்தனர். ஒதுக்குப்புறமான் இடங்களில் அவர்கள் கால்நடைகளை வளர்த்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் அண்மையக் காலமாக இந்த கால்நடைப் பண்ணைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு வருகிறது. இதனால் கால்நடைகளுடன் அதன் உரிமையாளர்கள் எங்கு போவது என்று திசை தெரியாமல் தத்தளித்து வருவதாக சேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுவரை 10 இந்திய பண்ணை உரிமையாளர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் அதன் உரிமையாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்று சேகர் சொன்னார்.
நாட்டில் அதிகமான தோட்டங்களை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் திகழ்கிறது. இதில் பல தோட்டங்கள் அழிக்கப்பட்டு அங்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விவகாரத்திற்கு தீர்வு வேண்டும் என்று உரிமை கட்சி கேட்டுக் கொள்கிறது.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் பண்ணைகளை உடைப்பதில் எந்த தவறும் இல்லை.
ஆனால், பண்ணை உரிமையாளர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும். பண்ணைகளை உடைத்தால் ஆடு, மாடுகளுடன் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதை பொறுப்பில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும் என்றார் சேகர்.
சிலாங்கூர் மாநிலத்தில் நிறைய காலி நிலங்கள் உள்ளது. அதில் 100 ஏக்கர் நிலத்தை இதுபோன்று பாதிக்கப்படும் பண்ணை உரிமையாளர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
இதன்வழி பாதிக்கப்படும் பண்ணை உரிமையாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என்று சேகர் குறிப்பிட்டுள்ளார்.



