Malaysia

3 இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 30 ஆயிரம் தொழிலாளர்கள் பற்றாக்குறை!!! குறைவான தொழிலாளர்களே வேலைக்கு வந்துள்ளனர் நிவாஸ் ராகவன் தகவல்

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மே 29-
ஜவுளி, முடித் திருத்துவோர், நகைக்கடை ஆகிய 3 தொழில் துறைகளுக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக தொழிலியல் சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.

இந்நிலையில் இத்துறைகளுக்கு 7,500 தொழிலாளர்கள் வழங்கப்படுவார்கள் என்று பிரதமர் அறிவித்த போதிலும் இதுவரை மிகமிக குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே இங்கு வேலைக்கு வந்துள்ளதாக சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச சிகை அலங்கார நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தின் 54ஆவது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் நிவாஸ் ராகவன் அவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 3 முக்கிய இந்திய பாரம்பரிய தொழில் துறைக்கான அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்த ஆண்டுக்கூட்டத்தில் கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த அந்நியத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்ததால் இதுவரை மிகமிக குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே இங்கு வேலைக்கு வந்துள்ளனர்.

அந்நியத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியும் அது இந்த தொழில் துறைகளுக்கு பயனில்லை என்ற வகையில் இருந்தது. இதன் அடிப்படையில்தான் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மை அண்மையில் சந்தித்த போது இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அறிவிப்புக்கு ஏற்ப ஜவுளித்துறைக்கு 5 தொழிலாளர்களும் முடித்திருத்தும் நிலையங்களுக்கும் நகைக்கடைக்கும் தலா 2 தொழிலாளர்கள் எந்தவொரு நிபந்தனையும் இன்றி வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் ஸ்டீவன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் மனிதவள அமைச்சு உள்துறை அமைச்சுக்கும் கடிதம் வழங்கியுள்ளது.  மேலும் இந்த 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான விதிகளும் தளர்த்தப்படும். ஆகையால், இந்தப் பிரச்சனைக்கு மிகப்பெரிய அளவில் தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாக நிவாஸ் ராகவன் சொன்னார்.

இந்த மூன்று பாரம்பரியத் தொழில் துறைகளின் அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. அப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று நிவாஸ் உறுதியளித்தார்.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் மிண்டாஸ் தலைவர் ராஜசேகரன், சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச சிகை அலங்கார நிலை உரிமையாளர் சங்கத் தலைவர் சிகாமணி ராஜரத்தினம் உட்பட கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button