
உழைக்கும் வர்கத்தின் உன்னதப் பெருநாள் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
உழைக்கும் வர்கத்தின் உன்னதப் பெருநாள் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர்,ஜன.12-.
உழைக்கும் வர்கத்தின் உன்னதப் பெருநாள் தைத்திங்களில் மலரும் பொங்கல் திருநாள். தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தை மாதத்தில் உழவர்களால், தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர் திருநாளாகும். “பழையன கழிதலும், புதியன புகுதலும்”, பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது. நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், தேவையில்லாத பொருட்களை மட்டுமன்றி வேண்டத்தகாத எண்ணங்களையும், செயல்களையும் நீக்க வேண்டும் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”
.தை முதல்நாள் சூரியனுக்காகப் பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம். தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் பொங்கலோடு கலந்த இனிய புத்தாண்டாக இது மலரட்டும்.
பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்த வருடப்பிறப்பு அனைவருக்கும் நல்ல வெற்றிகரமான வாழ்க்கையைத் தர வேண்டும். உழைப்பை முன்னிலைப் படுத்தி வாழ்வைக் கட்டமைத்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால்தான் விவசாயிகள் உழைத்து, தங்களது உழைப்பை அறுவடை செய்யும் நாளைக் கொண்டாடக் கற்றுக்கொடுத்தார்கள். அதுவே பொங்கலாக இன்று உலகம் முழுவதும் நாம் கொண்டாடி வருகிறோம்.
பொங்கலோடு மலரும் தமிழ்ப்புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக மலர வேண்டும். நினைத்த காரியம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். நமது வெற்றியை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது மிக மிக அவசியம். ஆக இந்தத் திருநாளை அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகக் கொண்டாடுவோம். மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



