
நாட்டில் புகழ்ப்பெற்ற மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 24,25 தேதிகளில் கோலாகலமாக நடைபெறும் 3 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் ஆலயத்தலைவர் டத்தோ தமிழ்செல்வம் அறிவிப்பு
தேசம் சிறப்பு செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 12-
நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் முக்கிய ஆலயமாக திகழும் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று
ஆலயத்தலைவர் டத்தோ தமிழ்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்த மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் கோவிட் 19 காரணமாக கடந்த மூன்று ஆண்டுகள் மிதமான அளவில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வாண்டு
மார்ச் 24, 25 தேதிகளில் மிகவும் கோலாகலமாக நடைபெறவிருப்பதாக ஜாலான் ஈப்போவில் உள்ள மெட்ராஸ் காபேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ தமிழ்ச்செல்வன் கூறினார்.
இந்த மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93ஆவது பங்குனி உத்திர திருவிழாவில்
3 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ தமிழ்செல்வன் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திருவிழா பெரிய அளவில் நடத்தப்படவில்லை. இதற்கு கோவிட் 19 ஒரு காரணம். அதேநேரத்தில்
கடந்தாண்டு ஆலயத்தில் திருப்பணிகள் நடந்ததால் பங்குனி உத்திர திருவிழா சிறிய அளவில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது 93ஆவது பங்குனி உத்திர விழா ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இதன் உச்சக்கட்டமாக வரும் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பால்குடம் ஏந்தியும் காவடிகள் ஏந்தியும் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் செய்து வருவதாக தமிழ்ச்செல்வன் சொன்னார்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்படுவார்கள்.
இந்த பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆலய சுற்றுவட்டாரத்தில் தற்காலிக கடைகளும் அமைக்கப்படவுள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்துமலையிலிருந்து பக்தர்கள் பாதை யாத்திரையாக மாரானுக்கு வருவார்கள். இவ்வாண்டு 12 குழுக்களாக 1,500 பேர் பாத யாத்திரையாக மாரானுக்கு வரவுள்ளனர். அப்படி வருபவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று டத்தோ தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டார்.
மேலும் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ கங்கை இசைக் குழுவின் குமார் தலைமையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு மாரான் மரத்தாண்டவரின் அருளை பெற்றுச் செல்லுமாறு டத்தோ தமிழ்ச்செல்வன் கேட்டு கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆலயத்தின் துணைத் தலைவர் மருதவேல், செயலாளர் டாக்டர் ஜெயேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



