
நாடு தழுவிய நிலையில் ஸ்ரீ முருகன் நிலையம் கல்வி புரட்சியை தொடங்கியுள்ளது துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா தகவல்
கோலாலம்பூர், மார்ச் 19-
இந்தியர்களின் பிரம்மாஸ்திரம் கல்வி மட்டும்தான் என்பதை வலியுறுத்தி 42 ஆண்டுகள் செயல்பட்டு 28 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ள ஸ்ரீ முருகன் நிலையம் நாடு தழுவிய நிலையில் கல்வி புரட்சியை தொடங்கியுள்ளது.

இந்த கல்வி புரட்சியின் அஸ்திவாரமான நேரடி வார வகுப்புகளை ஸ்ரீ முருகன் நிலையம் மீண்டும் புத்தெழுச்சியுடன் 2024ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் வார வகுப்புகளை தொடங்கியுள்ளதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.

பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்பவே இந்த வார வகுப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கவும் நல்ல பண்புகளை கொண்ட மாணவர்களாக இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் நடவடிக்கைகளை முன்னேடுத்துள்ளதாக சுரேன் தெரிவித்தார்.

UPSR மற்றும் PT3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்திய மாணவர்களின் கல்வி மீதான நாட்டம் குறைந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். அவர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வார வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக சுரேந்திரன் சொன்னார்.

பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டும் சிறந்து விளங்க வேண்டும் என்றில்லாமல் ஆசிரியர்களை மதிக்க வேண்டும், பெற்றோர்களை மதிக்க வேண்டும், மேலும் சமயம், கலாச்சாரம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டு அன்புமிக்க மாணவர்களாக உருவாக்க ஸ்ரீ முருகன் நிலையம் பாடுபடும் என்று சுரேந்திரன் உறுதியளித்தார்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் தோற்றுநர் தான்ஸ்ரீ தம்பிராஜா அவர்களின் குறிக்கோளுக்கு இணங்க மாணவர்களுக்கு கல்வியை மட்டும் போதிக்காமல் தற்போதைய மாற்றியமைக்கப்பட்ட கல்வி திட்டத்திற்கு ஏற்ப அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மொழியை உள்ளடக்கிய STEM வுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், நிகழ்வுகளை நடத்த ஸ்ரீ முருகன் நிலையம் தயாராக உள்ளதாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னாள் மாணவர் ஸ்ரீ கணேஷ் குறிப்பிட்டார்.

இந்தியர்கள் பலர் இதன் அடிப்படையில் முன்னனி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இத்தகைய மாணவர்களை உருவாக்க ஸ்ரீ முருகன் நிலையம் உறுதி கொண்டுள்ளதாக ஸ்ரீகணேஷ் சொன்னார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கோலாலம்பூர், சிலாங்கூர், கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 17 இடங்களில் வாராந்திர நேரடி வகுப்புகளை நடத்தவுள்ளது. இதற்காக ஸ்ரீ முருகன் கலவி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முழு மூச்சாக களமிறங்கியுள்ளதாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் பிரிக்பீல்ஸ் வாரவகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசோக் சொன்னார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



