
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க் கல்வி முக்கிய பாடமாக போதிக்கப்பட வேண்டும் கல்வியமைச்சுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்படும் தமிழ் அறவாரிய தலைவர் இளஞ்செழியன் தகவல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ் குணாளன்
பெட்டாலிங் ஜெயா, ஏப்.11-
இடைநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்க் கல்வியை முறையாக போதிக்க தமிழ் அறவாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ் அறவாரிய தலைவர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

தமிழ் பாடங்களை படிக்க 10 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் இருந்தாலும் தமிழ்க் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று கடந்தாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்திருந்தார். இது குறித்து மேல்விவரங்களை பெறுவதற்கு கல்வியமைச்சுக்கு தமிழ் அறவாரியம் கடிதம் அனுப்பும் என்று அது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இளஞ்செழியன் அவ்வாறு தெரிவித்தார்.
மலேசிய தமிழ் அறவாரியம் இதர 5 இயக்கங்களுடன் இணைந்து நடத்தவிருக்கும் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாடு நவம்பர் 23ஆம் தேதி மலாயா பல்கழைக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மலேசிய தமிழ் அறவாரிய தலைமையகத்தில் நேற்று ஏப்ரல் 9ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
இதில் மலேசிய தமிழ் அறவாரியம் (திரு.இளஞ்செழியன்), மலேசிய தலைமையாசிரியர் மன்றம் (திரு.எஸ்.எஸ்.பாண்டியன்), மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம் (திரு.அர்ஜுணன்), மலேசிய தமிழ்மொழிக் காப்பகம் திரு.கோபாலன், இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிக்கான அழுத்தங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட 11 ஆயிரம் மாணவர்கள் வேறு மொழிப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலை நீடித்தால் தமிழ்ப்பள்ளிகளை எப்படி பாதுகாப்பது.
ஆகவே தமிழ் கல்வி மாநாட்டில் இதுபோன்ற சவால்களுக்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியன் மன்றத் தலைவர் எஸ்.எஸ் பாண்டியன் கூறினார்.



