
துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சிந்தனை முயற்சியில் உருவான திட்டம் BRIEF-I பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக் புகழாரம்
தேசம் செய்திகள் குணாளன் மணியம் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஜூன் 5-
தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சிந்தனை முயற்சியில் BRIEF-I திட்டம் உருவானதாக பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர இந்திய சமூக தொழில் முனைவர்களுக்கு விரிவான நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் பொருளாதாரத்தில் உயர்வு காண்பார்கள்.
இதுதான் பேங்க் ராக்யாட்டின் இலக்கு என்று டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக் தெரிவித்தார்.

இந்த நன்முயற்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பேங்க் நெகாராவின் இலக்குகளுக்கு இணங்க, பொருளாதாரம், சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது.
எனவே, இத்திட்டத்தின் வாயிலாக தொழில்முனைவர்கள் வணிகத்தைத் தொடரவும், நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் வழிவகுக்கும் என பேங்க் ராக்யாட் நம்புகிறது என்று அவர் சொன்னார்.
டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய சமுதாயத்திற்காக இரண்டு பெரியத் திட்டங்களை அறிமுகம் செய்தார்.
தெக்குனில் ‘SPUMI Goes Big’ திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட்டும் அமானா இக்தியாரில் ‘பெண்’ திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.
தற்போது பேங்க் ராக்யாட்டின் வாயிலாக BRIEF-I திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி கொள்கைக்கு ஏற்ப இத்திட்டத்தை அறிமுகம் செய்வதில் பேங்க் ராக்யாட் மகிழ்ச்சியடைகிறது என்று டத்தோ இர்வான் கூறினார்.
இத்திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு பேங்க் ராக்யாட்டின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது QR2E (Quick Response to Entrepreneurs) ஆகியவற்றை மக்கள் வலம் வரலாம்.



