
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக பேங்க் ராக்யாட் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 5 –
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக BRIEF-i எனப்படும் திட்டத்திற்கு பேங்க் ராக்யாட் 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இந்திய தொழில் முனைவர்கள் பயன்பெறும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் மற்றொரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்களின் வர்த்தக விரிவாக்கம், மூலத்தன செலவுகளுக்கு உதவும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த முழு ஆதரவு வழங்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், வணிகத்தை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் தொழில் முனைவோரின் அர்ப்பணிப்பு எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறது என்று டத்தோ ரமணன் கூறினார்.
அதனால்தான் இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். பொருளாதார பலம் மட்டுமே இந்த நாட்டில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இதுவே எனது நம்பிக்கையும் கொள்கையும் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.
70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பேங்க் ரக்யாட் இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த BRIEF-I திட்டம், மலேசிய சமூகம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்கான ஓர் அர்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
அதே வேளையில் தீவிர வறுமையை ஒழிப்பதிலும் மலேசியாவின் பொருளாதாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது.
பேங்க் ரக்யாட் BRIEF-i திட்டம் இந்திய சமூகத்தின் தொழில் முனைவோருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய மற்றொரு முயற்சியாகும்.
இந்திய சமூக தொழில் முனைவோரை ஆதரிப்பதன் மூலம், அனைவருக்கும் வளமான பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற BRIEF-I அறிமுக விழாவில் உரையாற்றிய டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இவ்வாறு சொன்னார்.
சந்தையில் உள்ள மற்ற நிதி திட்டங்களுடன் ஒப்பிடுகையில் BRIEF-i பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறு வணிகர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரையிலான கடனுதவியை ஆண்டுக்கு 6.50% வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
சிறு, நடுத்தர வணிகர்களுக்கு 50,001 ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலான கடனுடவிக்கு ஆண்டுக்கு அடிப்படை வட்டி விகிதம் 0.67% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு சில நிதியுதவி திட்டங்களைப் போலன்றி, BRIEF-i க்கு தொழில்முனைவோர் கட்டாய சேமிப்பு அல்லது சுய உதவி குழுவில் சேர வேண்டிய அவசியமில்லை.
இது தொழில்முனைவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்கள் வணிகத்தில் முழுமையாக கவனம் செலுத்தும் சுதந்திரத்தை அளிக்கிறது என்றார் அவர்.
மற்ற நிதி திட்டங்களுடன் ஒப்பிடுகையில், BRIEF-I கடனுதவிக்கு விண்ணப்பிக்க எளிய ஆவண செயல்முறை வழங்கப்படுகிறது. இது தொழில்முனைவோர் எளிதாகவும் விரைவாகவும் விண்ணப்பிக்க உதவுகிறது.

மேலும் வணிகர்களுக்கு வணிக நிதி உத்தரவாத நிறுவனத்தின் உத்தரவாதங்கள், இலவச தக்காஃபுல் காப்புறுதி வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களுக்கு அடுத்த 14 வேலை நாட்களுக்குள் ஒப்புதல் அல்லது பதில் வழங்கப்படும். BRIEF-i நிதியுதவித் திட்டம் இலக்குக் குழுவை அடைவதை உறுதி செய்வதற்கான இலக்கை கொண்டுள்ளது.
மைக்ரோ நிறுவனங்கள் குறைந்தது ஓராண்டும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஈராண்டும் செயல்பட்டிருக்க வேண்டும். இந்நிறுவனங்கள் சித்தோஸ், சிக்கிரிஸில் இருந்து விடுப்பட்டிருக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.



