Malaysia

2023ஆம் ஆண்டுக்கான மித்ரா நிதி 100 மில்லியன் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது மக்களவையில் கேள்விக்கு பிரதமர் பதில்

கோலாலம்பூர்,ஜூலை 13-
கடந்த 2023ஆம் ஆண்டுக்கான மித்ராவின் 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எழுத்துப்பூர்வமாக அவ்வாறு பதிலளித்தார்.

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மித்ராவின் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி வருகிறது.

அவ்வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான நிதி பி40 மக்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு மட்டும் மித்ராவின் வாயிலாக 216 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக 134,247 பேர் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற்றனர்.

இந்திய சமுதாய உருமாற்றத்திற்காக 43 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 21,321 பேர் பயன் பெற்ற இத்திட்டங்களுக்காக 35,278,580.46 ரிங்கிட் பயன்படுத்தப்பட்டது.

இந்திய சமூக வணிக, வேலை வாய்ப்பு திட்டங்களுக்காக 113 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
35,034,811.90 ரிங்கிட் இத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக 83,883 பேர் பயன் பெற்றனர்.

இந்திய சமூக நல உருமாற்றத்திற்காக 60 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
29,686,607.64 ரிங்கிட் இத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இத்திட்டங்களின் வாயிலாக 29,043 பேர் பயன் பெற்றனர்.

இதற்கிடையில், இவ்வாண்டு ஜூன் வரை 40 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டங்களின் வாயிலாக 15,300 பேர் பயன் பெறுவார்கள் என இலக்கிடப்பட்டுள்ளது.
அத்திட்டங்கள் அனைத்தும் விரைவில் அமலுக்கு வரும் என்று பிரதமர் கூறினார்.

இதனிடையே மித்ராவின் முன்னாள் சிறப்பு பணிக் குழுத் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் 2023ஆம் மேற்கொள்ளப்பட்ட முக்கிய 12 திட்டங்கள் பின்வருமாறு:-

1. அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 10 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரிங்கிட் வீதம் (ஒரு முறை) மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

2. தனியார் தமிழ் பாலர் பள்ளிகளில் பயின்ற 4500 மாணவர்களுக்கு 200 ரிங்கிட் வீதம் மொத்தம் 11 மில்லியன் வழங்கப்பட்டது.

3. சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கு தனிநபருக்கு 9,600 ரிங்கிட் வீதம் மொத்தம் 8.3 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

4. கூட்டரசுப் பிரதேசத்தில் வரிய நிலையைச் சேர்ந்த 1845 இந்திய குடும்பங்களுக்கு மொத்தம் 8.3 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

5. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 72 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தலா 1 லட்சம் ரிங்கிட் வீதம் மொத்தம் 7.2 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

6. விமான பராமரிப்பு லைசென்ஸ் பயிற்சியில் பங்கேற்ற 100 இந்திய இளைஞர்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

7. 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 6 ஆயிரம் புதுபிக்கப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

8. மின்சார வாகன பராமரிப்பு பயிற்சியில் பங்கேற்ற 250 இந்திய மாணவர்களுக்கு 2.9 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

9. 375 சிறு, குறு, நடுத்தர இந்திய வியபாரிகளுக்கு 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வியாபார உபரிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

10. டுரோன் பயிற்சித் திட்டத்திற்கான 150 இந்திய இளைஞர்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டது.

11. நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிவியல் தொழில்நுட்ப மாதாந்திர இதழ் வழங்கும் திட்டத்திற்கு 7 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டது.

12. இந்திய சமூக உருமாற்ற திட்டஙளை மேற்கொள்ளும் அரசு சாரா இயக்கங்களுக்கு 29.2 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button