Malaysia

களும்பாங் மைஸ்கில்ஸ் அறவாரியம் மேற்கொள்ளும் இளைஞர் உருமாற்ற முன்னெடுப்பு இளைஞர்-விளையாட்டுத் துறை துணை நிற்கும் வஞ்சகத்திற்கு இனியும் இடமில்லை: –அமைச்சர் ஹன்னா இயோ

களும்பாங்,ஏப்.28-களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் உலு சிலாங்கூர் இளைஞர்களுடன் பூப்பந்து(பேட்மிண்டன்) பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சிக்குரியது என்று இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

“மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் உள்ள பூப்பந்து விளையாட்டாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பூப்பந்து விளையாட்டில் தேர்ந்த வல்லுநர் ஹாஜி ரோஸ்லின் ஹாஷிமின் கலந்துகொண்டிருப்பதும் சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு அடிப்படை நுட்பப் பயிற்சியை வழங்க முன்வந்திருப்பதும் பாராட்டிற்குரியது”.
இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் திறமையை வளர்க்கவும் ஆதரவு நல்கும் வகையில், டத்தோ வீரா லீ சோங் வெய் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அளித்த பூப்பந்து மட்டை இந்த நிகழ்ச்சியை இன்னும் அர்த்தமுள்ளதாக செய்துள்ளது; கிராமப்புற இளைஞர்கள் தரமான பயிற்சியைப் பெறுவதற்கு, இது போன்ற முயற்சி, நிச்சயம் துணைபுரியும் என்றார் அமைச்சர்.

இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் கொண்டுள்ள ஆர்வத்தை வளர்ப்பதிலும் முன்னெடுப்பதிலும் சிறந்த முறையில் பங்காற்றிவரும் ரோஸ்லின், மைஸ்கில்ஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்கள், டத்தோ விரா லீ சோங் வெய் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது என்றும் ஹன்னா இயோ தெரிவித்தார்.

பூப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த பூப்பந்து மட்டைகள் வெறும் உபகரணங்கள் மட்டுமல்ல; பங்கேற்பாளர்களின் திறன்மீதான நம்பிக்கையின் அடையாளமுமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றும் என்றும் ஹன்னா மேலும் உறுதி அளித்தார்.

முன்னதாக மைஸ்கில்ஸ் அறவாரியத் தலைவர் டாக்டர் சண்முக சிவா உரையாற்றியபோது, மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் பல்துறைசார் தொழிற்கல்வியையும் வாழ்க்கைக் கல்வியையும் ஒருசேரப் பெற்று வருகின்ற மாணவர்களின் நலம் சார்ந்து கோரிக்கை வைக்கும் பொழுதெல்லாம் என்றில்லாமல் கோரிக்கை வைக்காத வேளையிலும் வந்துவந்து உதவி நல்கிவரும் அமைச்சர் ஹன்னா இயோவிற்கு எத்துணை முறை நன்றி பாராட்டினாலும் போதாது என்று குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தால், மலேசிய அமைச்சரவையில் அன்பு-கருணை-பரோபகாரம் ஆகியவற்றுக்காக ஓர் அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கு ஹன்னா இயோவை அமைச்சராக்குங்கள் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைப்பேன்; அந்த அளவிற்கு, இந்த மாணவர்களின் மேம்பாட்டில் மட்டுமல்ல; பொதுவாகவே அனைத்துத் தரப்பினரிடத்தும் தாயன்புடன் அக்கறைக் காட்டி வருகிறார் என்று இலக்கியவாதியும் சமூகநல ஆர்வலருமான சண்முக சிவா அமைச்சரைப் புகழ்ந்தார்.

வழக்கறிஞர் சி.பசுபதி ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 24-ஆம் நாள் காலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பங் சொக் தாவ், தேசிய இளைஞர் கூட்டுறவு நிறுவனத்தின்(KOBENA) தலைமை நிருவாக அதிகாரி ஷாரிஸால் சபாருடின் உட்பட அதிகமானோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button