
மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் புதையுண்டு காணாமல் விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ தொ.முருகையா வலியுறுத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஆக.25-
மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் புதையுண்டு காணாமல் போன இந்திய மாது விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு மலேசிய அரசாங்கம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ தொ.முருகையா வலியுறுத்தியுள்ளார்.
மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்டதற்கு நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இது இயற்கையின் சீற்றம். எனினும் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடும்ப மாது விஜயலெட்சுமிக்கு மனிதநேயத்துடன் உதவ வேண்டியது நமது அரசாங்கத்தின் கடமையாகும் என்று டத்தோ முருகையா கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் மஸ்ஜிட் இந்தியாவில் நடந்துச் சென்ற இந்தியா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயலட்சுமி வயது (48) நில அமிழ்வில் புதைண்டார். இந்த சம்பவம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்து. ஆகையால், இந்த மாதுவுக்கு அரசாங்கம் அல்லது DBKL உதவ வேண்டும் என்று டத்தோ முருகையா தெரிவித்தார்.
மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. மக்கள் மஸ்ஜிட் இந்தியாவுக்கு செல்ல பயம் கொள்ளும் நிலை தற்போது எற்பட்டுள்ளதால் DBKL இங்கு பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மஸ்ஜிட் இந்தியாவில் நிலத்தடி கால்வாய்களை சோதனையிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நில ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்வழி நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு நில ஆய்வு அவசியம். இனியும் இது போன்ற நில அமிழ்வு ஏற்படக்கூடாது. இந்த விவகாரத்தில் DBKL கவனம் செலுத்த வேண்டும் என்று டத்தோ முருகையா சொன்னார்.
இந்த இந்திய மாது விஜயலட்சுமி தன் குடும்பத்தினருடன் மலேசியா வந்த போது இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாகும். இதுவரை அந்த மாதுவின் நிலை என்னவென்று தெரியாதது கொடுமையிலும் கொடுமை என்று டத்தோ முருகையா குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், அரசாங்கம் அல்லது DBKL இந்த குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று டத்தோ முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.



