
3,426 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணமாக சிலாங்கூர் அரசு 10 லட்சத்து 27,800 வெள்ளியை வழங்கியது !
ஷா ஆலம், செப் 8-
சிலாங்கூர் மாநில அரசின் பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 3,426 வசதி குறைந்த மாணவர்களுக்கு 10 லட்சத்து 27 ஆயிரத்து 800 வெள்ளி வழங்கப்பட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் உலு சிலாங்கூரில் நடைபெற்ற முதல் கட்ட நிதியளிப்பு நிகழ்வின் போது பத்து பள்ளிகளைச் சேர்ந்த 334 மாணவர்களுக்கு 1 லட்சத்து 200 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்ட வேளையில் இன்றைய இரண்டாம் கட்ட நிதியளிப்பு நிகழ்வில் 89 பள்ளிகளில் பயிலும் 3,092 மாணவர்களுக்கு 927,600 வெள்ளி மாணவர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்க பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.

சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பள்ளிப் பேருந்து கட்டணம் வழங்கும் மற்றும் ஓய்வு தமிழாசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முறையான போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் பள்ளியில் இருந்து அதிக தொலைவில் வசிக்கும் தோட்டப்புற மக்கள் மட்டுமின்றி ஏழ்மை நிலையில் உள்ள நகர்ப்புற பெற்றோர்களையும் இலக்காக கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
ஆண்டுக்கு 300 வெள்ளியை வழங்கும் இந்த பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவுவதை இந்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்வில் தமிழுக்காகவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் அளப்பரிய பங்கு ஆற்றிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஐவருக்கு சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டது.
கிள்ளான் ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிய டாக்டர் வேலாயுதம் த/பெ பொன்னையா, பேராக் ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய ஹரிஹரன் த/பெ கித்தப்பன், ரவாங் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய டாக்டர் ராஜேஸ்வரி த/பெ ஆறுமுகம், ரவாங் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிய கஞ்சினமலை த/பெ கோவிந்தசாமி, கோலக் கிள்ளான், ஜாலான் வாட்சன் தமிழ் பள்ளியில் பணியாற்றிய திருமதி இந்திராணி த/பெ வெள்ளையன் ஆகியோரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அந்த ஐந்து தலைமை ஆசிரியர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.



