
இந்திய சிறு, குறு தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள சிலாங்கூர் மாநில ம.இ.கா TEKUN Nasional அமைப்புடன் சந்திப்பு மாநில தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் தகவல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
ஷா ஆலம்,செப்.10-
இந்திய சிறு,குறு தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள சிலாங்கூர் மாநில ம.இ.கா TEKUN நேஷனலுடன் இணைந்து ஒரு பாலமாக செயல்படவிருப்பதாக அதன் தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் கூறினார்.
சிறு வியாபாரிகளை முன்னேற்றுவது எங்கள் நோக்கம். ஆகையால் தெக்குன் நேஷனல் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இடையே ஒரு முக்கியமான பாலமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு தாங்கள் அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் தெரிவித்தார்.

தெக்குன் நேஷனல் குறித்து அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் தெக்குன் வழங்கும் நிதி உதவியை அணுகுவதற்கு எளிதான வழிமுறைகளை கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பிரதிநிதிகளுடன் TEKUN Nasional தலைவர் டத்தோ அப்துல்லா சானி பின் அப்துல் ஹமிட்டை சந்தித்த பின் மேற்கொண்ட தமது முகநூல் பதிவில் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் அவ்வாறு சொன்னார்.
இச்சந்திப்பின் போது TEKUN வழங்கும் நிதி உதவி மூலம் மலேசிய இந்திய தொழிலதிபர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. TEKUN நேஷனல் நிதியில் முதலில் 30 மில்லியன் நிதியும் பிறகு மீண்டும் கூடுதலாக 30 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டதாக டத்தோ அப்துல்லா சானி பகிர்ந்து கொண்டார்.
இதில் மொத்த RM60 மில்லியன் நிதியில் 27 மில்லியன் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது. நிதி தேடும் தொழில்முனைவோருக்கு இது குறிப்பிடத்தக்க சாத்தியம் ஆகும் என்பதால் சிலாங்கூர் ம.இ.கா அதன் 22 கிளை அலுவலகங்கள் சிலாங்கூர் முழுவதும் உள்ள 18 TEKUN நேஷனல் அலுவலகங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளதாக டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் விவரங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் நீண்டகால நோக்கமானது B40 தொழில்முனைவோருக்கு தெக்குன் குறித்த தகவல்களை முறையாக வழங்குவதுதான். இதன் மூலம் அவர்கள் TEKUN நிதிக்கு வெற்றிகரமான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்று டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் மேலும் சொன்னார்.



