
மைக்கி தேர்தல் கோபாலகிருஷ்ணன் பதவியைத் தற்காத்துக் கொண்டார்

கோலாலம்பூர், செப்.28-
மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத்தின்(MAICCI) தலைவர் தேர்தலில் அதன் நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ ந. கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
மைக்கி அமைப்பின் 73-ஆவது தேசியப் பேராளர் மாநாடு செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்றது.
கடந்த இரு தவணைகளாக மைக்கியை வழிநடத்திவரும் கோபாலகிருஷ்ணன், இந்த முறையும் தன் பதவியை தற்காக்க முயன்ற நிலையில் மைக்கியின் பொருளாளரும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத் தலைவருமான டத்தோ டாக்டர் வி.சண்முக நாதனும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார்.
இன்றைய ஆண்டுக்கூட்ட வாக்களிப்பு முடிவில் கோபால் 139 வாக்குகளுடன் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொண்டார். ஷானுக்கு 88 வாக்குகள் கிடைத்தன.
இதில் நடப்பு துணைத் தலைவரான ஷாம் சுந்தர் 38 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் நிலைகொள்ள டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா 109 வாக்குகளை அள்ளி, மைக்கியின் புதிய துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
மைக்கி செயலாளராக 125 வாக்குகளுடன் தட்சணாமூர்த்தி தேர்வுபெற்றார். அவரை எதிர்த்தவருக்கு 101 வாக்குகள் கிடைத்தன.
பொருளாளராக சுஜென்(138) வென்றார்.
இன்றைய மைக்கி தேசிய பேராளர் மாநாட்டில் தலைவர் பதவிக்கு கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோபாலகிருஷ்ணன் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



