
சிறார் இலக்கிய விழா ஆறாவது ஆண்டாக மிகவும் சிறப்பாக நடந்தேறியது
சிறார் இலக்கிய விழா
ஆறாவது ஆண்டாக மிகவும் சிறப்பாக நடந்தேறியத
கோலாலம்பூர்,ஜூலை 2-
மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தின் ஏற்பாட்டில் உப்சி வளர் தமிழ் மன்றத்தின் ஆதரவோடும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஆதரவோடும் உப்சி பல்கலைக்கழகத்தில் ஆறாவது ஆண்டாக சிறார் இலக்கிய விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இம்முறை இளையோர்களை நோக்கி சிறார் இலக்கியம் என்கிற கருப்பொருளோடு நடந்த சிறார் இலக்கிய விழாவின் ஒருங்கிணைப்பாளராக விளங்கிய எழுத்தாளரும் ஆசிரியருமான கே.பாலமுருகன் அடுத்த தலைமுறை மாணவர்களிடையே சிறார் இலக்கியம் குறித்த ரசனையும் வாசிப்பும் தேடலும் விரிவடைய வேண்டுமென்ற நோக்கத்துடந்தான் சிறார் இலக்கிய விழாவை இளையோர்கள் மத்தியில் நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் இதுவரை வெளிவந்திருக்கும் சிறார் நாவல்கள் மீதான வாசகப் பார்வையும் விமர்சனமும் இக்காலக்கட்டத்தில் சிறார் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவை என்பதால் இவ்விழா இரு அங்கங்களாக நடத்தப்படுவதோடு இளையோர்களின் நாவல் ஆய்வரங்கம் என்கிற அமர்வையும் உட்படுத்தியதாகத் தமதுரையில் தெரிவித்தார்.
அதோடுமட்டுமல்லாமல் கல்வியாளர்களையும் இலக்கியவாதிகளையும் இணைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் தேவை என்றும் அவர் தமது கருத்தாக முன்மொழிந்தார்.
இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் எங்கள் மாணவர்களின் முன்னிலையில் நடப்பதென்பது சிறந்த வாய்ப்பாகக் கருதுவதாகவும் அடுத்த தலைமுறை இளைஞர்களை இதன்வழி சிறார் இலக்கியத்தில் ஈடுப்படுத்த முடியும் என்பதாகவும் விழாவிற்கு வரவேற்புரை வழங்கிய உப்சி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் விரிவுரைஞர் முனைவர் முனிஸ்வரன் குமார் கூறினார்.
தொடர்ந்து தலைமையுரையாற்றிய உப்சி பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஆலோசகரும் விரிவுரையாளருமான முனைவர் சி.இளங்குமரன், தமது தலைமையுரையில் சிறார் இலக்கியம் பேச வந்திருக்கும் ஒவ்வொருக்குள்ளும் ஒரு குழந்தைமை இருப்பதால்தான் நாம் எல்லோரும் இங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரிவித்ததோடு தமிழுக்காகவும் தமிழ் இலக்கியத்திற்காகவும் எங்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் கிடைக்கப்பெறும் எனக் சொன்னார்.
வாழ்த்துரையில் உரையாற்றிய கவிஞர் ந.கு முல்லைச்செல்வன் அவர்கள் நாட்டின் முக்கியமான சிறார் இலக்கிய விழாவில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தை இணைத்துக் கொண்டமைக்காக விழா ஏற்பாட்டுக் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்தார். சிறார் இலக்கியம் படைக்கப்படுவதென்பது அடுத்தக்கட்ட இலக்கிய வளர்ச்சிக்கு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
சிறார் இலக்கிய விழாவின் சிறப்பு வருகையாளர் இலக்கியக் காவலர் என அழைக்கப்படும் திரு.பி.எம் மூர்த்தி சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சிறார் இலக்கியம் என்பது சிறுவர்களை மையப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சிறுவர்களின் உளவியலுக்கு வடிக்கால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சிறார் இலக்கியத்தின் உள்ளமைப்பைப் பற்றி விரிவாகப் பேசினார்.
நன்றியுரையாற்றிய ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் வெ.பார்வதி விழாவினை ஒருங்கிணைத்ததோடு ஈப்போ ஆசிரியர் கல்விக்கழகத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளித்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு.கே.பாலமுருகன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மாணவர்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற இலக்கியம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது இன்னும் இலக்கியத்தில் அதிகமான இரசனையை வளர்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், விழாவின் முக்கிய அங்கமாக ‘பி.எம் மூர்த்தி படைப்பிலக்கிய விருது 2025’ அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்கள் இவ்விருதின் பின்னணியையும் ஒவ்வொரு ஆண்டும் இனி சிறார் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.
இவ்வாண்டு முதல் பயணம் என்கிற சிறார் நாவல் எழுதியதோடு கடந்த 1978 முதல் 2015 வரை மலேசியத் தேர்வு வாரியத்தின் வழி சிறார் இலக்கியத்திற்குச் சிறந்த பங்காற்றிய விச்சு மாமா என்றழைக்கப்படும் மேடை நாடக இயக்குநர், நடிகர் எழுத்தாளர் விஷ்வநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் சகோதரர்கள் ஏற்பாட்டில் அவருக்கு ரொக்கத் தொகை ரி.ம 1000.00 வழங்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல் மலேசியத் தமிழாசிரியர் இலக்கியக் கழகம் (இலக்கியகம்) எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் ஹைக்கூ சாதனைகளையும் முயற்சிகளையும் பாராட்டி அவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான ‘பாஷோ ஹைக்கூ விருது’ அளித்துக் கௌரவித்தது.
அவ்விருதினை இலக்கியகம் சார்பில் திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் வழங்கினார்.
இரண்டாவது அமர்வில், மலேசியாவில் வெளிவந்த சிறார் நாவல்களின் ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.
ஈப்போ ஆசிரியர் கல்விக்கழகத்தின் மாணவர்களான நே.கௌசல்யா, சு.அர்வின் ராஜ், ச.உதயா, த.தவநிஷா, ஆ.பாக்கியலெட்சுமி, ஜே.சூரியா ஆகியோர் எழுத்தாளர் கே.பாலமுருகனின் மூன்று சிறார் நாவல்களை முன்வைத்து வாசகப் பார்வையை வழங்கினர்.
மேலும், இளம் எழுத்தாளர் பிருத்விராஜூ அவர்கள் எழுத்தாளர் மணிராமு எழுதிய அக்குவாமெரின், எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய வனத்தேவதை ஆகிய சிறார் நாவல்களை முன்வைத்து இரசனை விமர்சனத்தை வழங்கினார்.
எழுத்தாளர் காந்தி முருகன் விஷ்வநாதன் எழுதிய முதல் பயணம், செகு ராமசாமி எழுதிய கரிக்குட்டி ஆகிய சிறார் நாவல்களை முன்வைத்துத் திறனாய்வுப் பார்வையை வழங்கினார்.
இறுதி அங்கமாக, கேள்வி பதில் அமர்வு நடத்தப்பட்டது. எழுத்தாளர் கே.பாலமுருகன் உரையாற்றிய எட்டுப் பேரிடமும் சிறார் இலக்கியம், சிறார் நாவல்கள் பற்றிய கேள்விகளை முன்வைத்தார்.
பேச்சாளர்கள் தங்களின் வாசிப்பு அனுபவத்திலிருந்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவின் மூலம் வந்திருந்த இளையோர்கள் மத்தியில் சிறார் இலக்கியத்தின் அகம் புறம் சார்ந்த பலத் திறப்புகள் ஏற்பட்டதாக பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் தன் ஏழாவது வயதில் ‘மர்மத் தேசத்தில் மந்திரப் பாட்டி’ எனும் சிறார் மர்மக் கதைகளை எழுதிய செல்வன் நிமலன் குமார் விஜயகுமார் அவர்கள் சிறப்பு வருகையளித்தார். அவருக்குப் பரிசுகளும் ரொக்கத் தொகையும் அளிக்கப்பட்டு விழா ஏற்பாட்டுக் குழுக் கௌரப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.



