
வேண்டும், வேண்டும் இம்மண்ணில், தொல்காப்பியத் திருக்கோட்டம் வேண்டும்
தேசம் சிறப்புச் செய்திகள்
மண்ணும், கடலும்,வானும் மறைந்து முடிந்தாலும், மறக்க முடியாதய்யா, உன் தமிழை என்றும் இம்மண்ணிலிருந்து பிரிக்க முடியாதையா..புகழொடுத் தோன்றிய அருமகர், பெருமகர், தமிழ்ச்சான்றோர் ஐயா சீனியார்…, “இன்பத்தமிழை இணைந்து வளர்ப்போம் என,அன்புக் கட்டளையிட்டு அரவணைத்து மகிழ்ந்த, தொல்காப்பியச் செம்மல் மறைந்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.யாக்கைக்கு சீனி அளவாய் இருத்தல் வேண்டும்.ஐயா சீனியார் வழங்கியச் சீனி என்பது தமிழ்ச் சீனி,தாய் தமிழுக்கு அளித்த பெருந்தீனி. உண்டோ அதற்கோர் அளவு.பாலாறாய், தேனாறாய் தமிழ்கூறு நல்லுலகம் தமிழை ஆழ்ந்துக் கற்றுயர ஐயா அவர்கள், “தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ வழங்கினார்; வியந்திடும் “தமிழ்ப் புணர்ச்சி விதிகள்’ அருளினார்; பயன்மிகு “நல்ல தமிழ் இணக்கணம்’, “தேன் கூடு’… இன்னும் அவர் ஈகை செய்திட்ட, கைம்மாறு கருதாது, வழங்கியது நாமறிந்ததே. வாரித்தந்த மாரியாய் நம்மோடு வாழ்ந்தப் பெருமகனார் இன்று இலாதுப் போயினும், தமிழாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். படிக்கவா தந்தார் அரிய படைப்புகளை, இன்பத் தமிழை குடிக்க அல்லவா தந்தார் அந்தப் பெருந்தகை.”உங்கள்குரல்’ வழியும், முன்னெடுத்து நடத்திய இலக்கண, இலக்கிய பயிலரங்குகள், குறிப்பாக யாப்பிலக்கணப் பட்டறைகள் மூலமாகவும், பயனடைந்தோர் பட்டியல் நீளும், கவிஞர்களாய் உருவானோர் அதில் அடங்குவர்.எத்தனையோ ஆண்டுகளாய் கவிதைகள் புனைந்த கவிஞர்களின் படைப்பில் இலக்கணப் பிழைகள் இருப்பின், தயங்காது திருத்தும் மனத்திண்மை அவருக்கே உரியது.அனைவரையும் சமன்ய நிலைப்பாட்டில், ஊக்கமளிப்பார். அஃது நல்லாக்கத்திற்கு வழிவகுத்தது. பினாங்கில் இலக்கியக் களம் பல ஆண்டுகளாய் நடந்தேறியபோது தலைமை ஏற்று,எழுப்பும் வினாக்களுக்கும்,ஐயங்களுக்கும், அமைதியாய், விளத்தங்களை அள்ளித் தெளிப்பார். மூங்கிலுக்கும், ஓங்கலுக்கும், சடைக்கும், சடையனுக்கும்,வாணிகத்திற்கும்,வணிகருக்கும்,இன்னும் பல நாறு சொற்களுக்கும் ,மூலச் சொல், வேர்ச்சொல், கிளைச் சொற்கள் யாது என்பதனை ஆழ்ந்தலசி, தொன்மை இலக்கியச் சான்றுகளோடு,தெள்ளத் தெளிவாய், துல்லிதமாய் வழங்கிடும் பேரறிவாளராய் விளங்கினார். குறிப்பாக பாவினமும்,ஓசை நயமும் தொடர்புடைய கேள்விகளுக்கு ஐயா விளத்தமளித்தலும்,தமிழ்த் துறையில் ஐயாவின் தேடலும்,ஆய்வும்,தெளிவும், பேராற்றலும், வியக்கச் செய்வன..இலக்கியக் களத்தில் அவர் பக்கத்தில் அமர்வதே பேரின்பமன்றோ..!குமுகாய அமைப்புகள், அரசியல் கட்சிகள்,உலக மாநாடுகளில் எல்லாம் “காப்பியனை ஈன்றவளே ‘ஒலித்துக் கொண்டே உள்ளன.இறையருட் கவிஞரை என்றும் மறவாது, நன்றியறிதலோடு அவரது பெயரிலே, கவிதைப் போட்டிகளும், கவியரங்குகளும் நடத்தப் படுகின்றன. அத்தகைய தமிழுணர்வாளர்களைப் பாராட்டுவோம்.”வேண்டும்.., வேண்டும் இம்மண்ணில், தொல்காப்பியத் திருக்கோட்டம் வேண்டும்’.”கவிஞர் சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்’ அமையவிருப்பது நமக்கு கிடைக்கவுள்ள பெரும்பேறு. காப்பியன் நினைவகம்,ஐயா கோ.சாரங்கபாணியார் சிறிய பொது மண்டகம்,புலவர் ஐயா பா.மு.அன்வர் நூலகம், கணினியறை, நிருவாக அறை,பாலர் வகுப்பறை என வடிவமைக்கப் பெறவுள்ளன.ஒரு பாகம் ம.ப.1000 வெள்ளியென, ம.ப.850 ஆயிரம் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.இதனை இதனால் இவன் முடிக்கும்.. என்பதற்கிணங்க,சான்றோர்கள் கொண்ட குழுவொன்று இக்கட்டடம் முழு உருபெற, தங்களின் கடமைதனை ஆற்றிவருகின்றனர்*.*இம்முயற்சி தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு துறை சார்ந்தோர் நிதி வழங்கியுள்ளனர்.வழங்கிக் கொண்டிருப்போருக்கு நம் நன்றியும், வாழ்த்தும் உரியன ஆகட்டும்.நாமும் அவர்களோடிணைந்து இக்கட்டடம் முழுமை அடையும் வரை பாடாற்றுவது, தமிழுக்கும், அயராது தமிழ்த் தொண்டாற்றிய புலமைமிகு நல்லார்க்கினியருக்கு,நாம் வாழும் காலத்தில், நம்மோடு வாழ்ந்திட்ட தொல்காப்பியச் செம்மலுக்கு, செய்திடும் அறப்பணியாகும்.உறுதியாய் இக்கட்டடம் ஒரு தமிழாய்வுக் கூடமாய் அமையும் என்பது திண்ணம்.யாதானும் நாடாமல் ஊராமால்; என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.இன்பத் தமிழை இணைந்தே வளர்ப்போம்.
– முருகு மாதவன், கூலிம் கடாரம்



