
மலேசிய ஐயப்ப பக்தர்களின் கோரிக்கைகள் பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது இந்திய பிரதிநிதிகள் வேலை டத்தோஸ்ரீ எம்.சரவணன் சூளுரை
பத்துகேவ்ஸ், ஜன.1-
கடந்தாண்டு பிரதமர் இந்தியாவுக்கு சென்றிருந்த போது தமிழ் பேசும் அமைச்சர் இருந்திருந்தால் சபரிமலை பிரச்சினை தொடர்பில் கோரிக்கையை முன்வைத்திருப்பார் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
இந்த சபரிமலை ஐயப்பன் விவகாரம் தொடர்பில் இந்திய தலைவர்கள் இக்கோரிக்கையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்ட வேண்டும். இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
பத்துகேவ்ஸ் ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் இரு முடிக் கட்டு திருவிழா ஜனவரி 1ஆம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய சபரிமலை என்றழைக்கப்படும் பத்துமலை ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
அந்தவகையில் ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் அதிகரித்தாலும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை இவ்விழாவில் கலந்து கொண்ட ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்
தேவஸ்தான தலைவர் யுவராஜா குருசாமி தலைமையிலான நிர்வாகத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
இப்பக்தர்களின் வசதிக்காக விமான நிலையங்களில் சிறப்பு வழித்தடத்தை அமைத்து தர தேவஸ்தானம் கோரிக்கை முன்வைத்து வருவதால்
இந்திய பிரதிநிதிகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.



