
பத்துமலை மேல்குகைக்கான மின் படிக்கட்டு ஜனவரி 25ஆம் தேதி கட்டுமானம் தொடங்கும் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா தகவல்
பத்துமலை,ஜன.1-
பத்துமலை திருத்தலத்தில் மேல்குகைக்கு செல்வதற்கான மின் படிக்கட்டு கட்டுமானம் ஜனவரி 25ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கவுள்ளதாக
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
பத்துமலை மேல்குகைக்கு செல்வதற்கு மின் படிக்கட்டு கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்பாக அண்மையில் பத்துமலைக்கு வருகை மேற்கொண்ட சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியுடன் பேச்சு நடத்தப்பட்டது. இத்திட்டம் குறித்து மந்திரி புசாருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கான மாநில அரசின் ஒப்புதல் கடிதம் ஜனவரி 19ஆம் தேதி வழங்குவதற்கு மந்திரி பெசார் இசைவு தந்துள்ளார். இதன் அடிப்படையில் மின் படிக்கட்டு கட்டுமான பணி ஜனவரி 25ஆம் தேதி தனது தலைமையில் அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கவிருப்பதாக தான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.
இந்த மின்படிக்கட்டு திட்டம் 2026 ஆம் ஆண்டு தைப்பூச விழாவிற்கு முன் இந்த திட்டத்தை பூர்த்தி செய்ய தேவஸ்தானம் இலக்கு கொண்டுள்ளது.
இந்தவேளையில் மாநில அரசுக்கும் மந்திரி புசாருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் தான்ஸ்ரீ நடராஜா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



