
Malaysia
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை நட்சத்திர விழா மாணவர்களை பாராட்டும் ஒரு விழா
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை நட்சத்திர விழா
மாணவர்களை பாராட்டும் ஒரு விழா
ஜொகூர்,ஜன.16-
கல்விகேள்விகளில் சாதனை படைத்து மிளிரும் மாணவர்களைப் பாராட்டும் வகையில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை நட்சத்திர விழா மிகக் கோலாகலமாய் இஸ்கண்டார் புத்திரி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இஸ்கண்டார் புத்திரி மாநகர் மன்ற உறுப்பினர் திரு.வெ.சங்கரபாண்டியன் இம்மண்டபத்தை இந்நிகழ்விற்காகப் பெற்றுத்தந்திருந்தார்.
ரினி தமிழ்ப்பள்ளியின் மாலைப்பிரிவு துணைத்தலைமையாசிரியை திருமதி.மு.தமிழரசி அவர்களின் தலைமையில் ஆசிரியை திருமதி.லீலாஷினி மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வகுப்பறை தர மதிப்பிட்டில் சிறந்த அடைவுநிலையைப் பெற்ற மாணவர்களை இன்று சிறப்பிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி , இந்த அங்கீகாரம் மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து அவர்களை வெற்றி பாதைக்கு இட்டுச்செல்லும் எனக் கூறினார்.
மேலும், அடுத்தாண்டின் சாதனை நட்சத்திர விழா பள்ளி மண்டபத்தில் நடைபெறுமென நம்பிக்கை தெரிவித்தார். இவ்விழாவிற்குச் சிறப்பு வருகையளித்த ஜொகூர் மாநில பாலர் பள்ளி, ஆரம்பப்பள்ளி, பள்ளி நிர்வாகப் பிரிவு உதவி இயக்குநர் திருவாளர் இரவிச்சந்திரன் இராமச்சந்திரன் அவர்கள் நாம் மாற்றங்களை எதிர்நோக்கி மாணவர் சமுதாயத்தை வடிவமைக்க வேண்டும் எனக் கூறினார்.
மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொணர பல்வேறு தளங்களை அமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய நிகழ்வின் சிறப்புப் பிரமுகர் டத்தோ திரு.புருஷோத்தமன், மாசாய் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் (MIWA) அவர்கள் இம்மாணவர் சமுதாயம் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்க வேண்டுமெனில் கல்வி ஒன்றே அவர்களுக்குப் பற்றுக்கோல் எனக் கூறினார். மேலும், ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இன்றைய உலக மாற்றத்திற்கேற்ப அனைத்தையும் கற்று எதிலும் சாதனை படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து நன்கொடையும் வழங்கிச் சிறப்பித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றான சாதனை நட்சத்திர விழாவில் அதிகமான மாணவர்கள் பரிசுகள் பெறுவதைச் சுட்டிக்காட்டிய பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர் திருவாளர் நா.சுரேஷ் அவர்கள், நம் பள்ளிக்கு இணைக்கட்டிடம் எழுப்புவதற்கான முன்னேற்பாடுகள் தொடக்க நிலையில் உள்ளதாகவும் சொன்னார்.
இந்நிகழ்விற்கு வருகைபுரிந்த சிறப்புப் பிரமுகர்கள், தலைமையாசிரியர், துணைத்தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர் மற்றும் பள்ளி வாரியக் குழுவினர் இன்றைய சாதனை நட்சத்திர விழாவில் ஏறக்குறைய 430 மாணவர்களுக்கு நனிச்சிறப்பு, சிறப்பு மற்றும் சிறந்த வருகைக்கான பரிசுகளை எடுத்து வழங்கிச் சிறப்பித்தனர். மாணவர்களின் கண்கவரும் படைப்புகளோடு பரிசு பெறும் மாணவர்களின் மகிழ்ச்சியலை என அரங்கமே நிரம்பியிருந்தது.
இன்றைய நிகழ்வு எவ்வித தங்குத்தடையுமின்றி நடைபெற துணை நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மாலைப்பிரிவு துணைத்தலைமையாசிரியை அவர்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.



