
இந்திய தொழிலதிபர்கள் வணிகர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ முன் வாருங்கள் பேராக் ஐபிஎப் ஆயர்தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிதியுதவி வழங்கினர்
மஞ்சோங், ஜன.18- ஆயர்தாவார் தோட்டத்தமிழ்ப்பள்ளி இம்மாதம் 6 ல் தீக்கரையானது.
சுமார் 80 சதவீதம் தீயால் அழிந்தது.அப்பள்ளிக்கு உதவும் பொருட்டு பேராக் ஐ பி எப் இயன்ற நிதியுதவி வழங்கி உதவியதாக பேராக் ஐபிஎப் தலைவர் வி.மாணிக்கம் இப்பள்ளி்க்கு நேரடி வருகை மேற்கொண்டபோது கூறினார்.
இவர் பெருவாஸ் ஐபிஎப் தொகுதி தலைவர் வி.கந்தசாமி மற்றும் செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடன் பள்ளி நிர்வாகத்தை நேரடியாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் மற்றும் பள்ளி வாரியத்தலைவர் மனஹரன் பள்ளியின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கம் அளித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பேராக் ஐபிஎப் இப்பள்ளிக்கு இயன்ற உதவிகள் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அத்துடன், இப்பள்ளியின் கணினிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் விளையாட்டு தளவாடப் பொருட்கள் போன்றவைகள் தீயால் அழிந்து விட்டதாக தகவல் கிட்டியதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளியை காப்போம்! தமிழ்ப்பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவோம் என்று பிரசாரம் செய்வது போதாது. இம்மாதிரியான காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்திய தொழில் அதிபர்கள், இந்திய வணிகர்கள் மற்றும் இந்திய சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



