
மலேசியா திருநாட்டின் இரும்பு பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈப்போ மங்கையர் திலகம் டாக்டர் தி.இராமநாயகம்
ஈப்போ,மார்ச் 7-
மாதர்களாக பிறந்திருக்க மாதவம் செய்திருக்க வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் என பலர் கூறி வந்தாலும் பெண்களாக பிறந்ததால் தான் நாங்கள் சிரமப்படுகிறோம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால் அதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் சமாளித்து குடும்பம், வர்த்தகம், அரசியல், சமூகவியல் என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் ஈப்போவை சேர்ந்த மங்கையர் திலகம் டாக்டர் தி.இராமநாயகம்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ம.இ.கா கட்சியில் நீண்ட நாளாக பயணிக்கும் அவர் அதிகமாக அக்கட்சியை நேசிப்பவர். அந்த வேளையில் போக்குவரத்து அதிகமாக இல்லாத காலத்தில் அதிகமாக கட்சிக்காக உழைத்தவர்.
தேசிய ம.இ.கா மகளிர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது மிகவும் நேர்த்தியாக சேவையாற்றி அதிகமான பெண்களை கட்சிக்குள் நுழைத்தவர்.
1975 ஆம் ஆண்டில் ஈப்போ ரயில் நிலையத்தில் கடை ஒன்றை அமைத்து வியாபாரம் செய்ய தொடங்கி இன்று வரை அக்கடையை சிறப்பாக வழிநடத்தி வரும் 85 வயது மாதரை நாம் பாராட்டியாக வேண்டும்.
மேலும் , 1985 ஆம் ஆண்டில் ஈப்போ மாநகரமன்ற கவுன்சலராக வலம் வந்த அவர் நம் இந்திய பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர்.
தேசிய தமிழ் மணிமன்றம் , மிம்மி எனப்படுப் மலேசிய இந்திய மகளிர் இயக்கம் வழி இன்றும் கூட சமூகத்திற்காக பாடுபட்டு வருகிறார்.
தம்மை போல் இந்திய மகளிர் குடும்பம், சமூகவியல் அனைத்திலும் வெற்றி பெற தாம் வழிக்காட்டுவதாக அவர் கூறினார்.
உலகிலுள்ள மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை டாக்டர் தி.இராமநாயகம் தெரிவித்தார்.
தொடர்ந்து பல விருதுகளை டாக்டர் தி.இராமநாயகம் பெற்றுள்ளார். அதில் துன் டாக்டர் பாத்திமா விருதினை 1994 ஆம் ஆண்டு தேசிய அளவிலான மகளிர் விழாவை முன்னிட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



