Malaysia

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க் கல்வி தேக்க நிலையா? சிவசுப்பிரமணியம் அறிக்கையின் எதிரொலி இடைநிலைப்பள்ளிகள் கல்வியமைச்சின் சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டும் கல்வியமைச்சு உத்தரவு

கோலாலம்பூர்,மார்ச் 12-
இடைநிலைப்பள்ளிகளில் தொடக்கக் கல்வியை முடித்துக் கொண்டு இடைநிலைப் பள்ளிக்கு செல்கின்ற தமிழ் மாணவர்கள், தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை படிப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர் என்று ம.இ.கா கல்விக்குழு துணைத்தலைவர் எல்.சிவசுப்ரமணியம் ஊடகத்தில் கூறியதன் எதிரொலியாக கல்வியமைச்சு பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களில் தேர்ச்சிபெறும் மாணவர்கள்தான் தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்ககல்வி நிலையங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். என்று சிவசுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றின் வழி கருத்து தெரிவித்த கல்வியமைச்சு, இந்திய மாணவர்கள் அவர்களின் தாய்மொழி பாடங்களை எடுக்க ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை என்றும் இது தொடர்பில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கல்வி அமைச்சு வெளியிடும் சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இடைநிலைப்பள்ளி நிர்வாகங்கள் மாற்றங்கள் இருந்தால் அதனை சரியான வழியில் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழ்மொழி, தமிழ் இலக்கிய பாடங்களை தேர்வு பாடமாக எடுப்பதை தடைவிதித்ததில்லை. இப்பாடங்களை போதிக்க கோரிக்கை இருந்தால் அமைச்சு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி ஏற்பாடு செய்யும் என்று அமைச்சு அந்த அறிக்கையில் கூறியது.

15 மாணவர்கள் இருந்தால் ஒரு தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலை பொதுவாக இருந்தாலும் பெரும்பாலும் தனி ஆசிரியர் இடைநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்படுவதில்லை. ஒரு சில பள்ளிகளில் ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பகுதி நேரமாக வந்து பாடம் நடத்துகின்றனர் என்று சிவசுப்ரமணியம் சொன்னார்.

அத்தகைய வாய்ப்பு இல்லாத பள்ளிகளில் தன்னார்வத்தின் அடிப்படையில் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் பாடம் நடத்தப்படுகிறது.
போக்குவரத்து சிக்கல் உள்ள மாணவர்களுக்கு இந்த நிலை ஒரு தடையாகவும் பின்னடைவாகவும் இருக்கிறது. இன்னும் சில பள்ளிகளில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களே, தாமாக முன்வந்து தன்னார்வ அடிப்படையில் இப்படி வார விடுமுறை நாட்களில் பாடம் நடத்தப்படுவதாக சிவசுப்ரமணியம் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில பள்ளிகளில் பள்ளி நாட்களிலேயே மாலை நேரத்திலோ அல்லது எல்லா மாணவர்களுக்கும் இசைவான நேரத்தில் பாடம் நடத்தப்படுகிறது.
மொத்தத்தில் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க் கல்வி என்பது இரண்டும் கெட்டான் நிலையில்தான் இருக்கிறது. இதை சீர்செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு பள்ளியிலும் தனி தமிழாசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய சமுதாயத்தில் கல்வியாளர்களும் பெற்றோர்களும் மாணவர் தரப்பிலும் தொடர்ந்து வைக்கப்படுகின்ற கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள் சுற்றறிக்கையை முறையாக பின்பற்றுதல், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக
கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button