Malaysia

தென்றலின் 24-ஆவது ஆண்டு விழா டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது

கோலாலம்பூர்,மே 2-
தென்றல், வானம்பாடி ஆகிய வார, மாத இதழ்களில் சார்பில் 24ஆவது ஆண்டு விழா மைஸ்கில்ஸ் அறவாரிய மாளிகையில் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தில் நடைபெற்றது.

தென்றல் இதழின் ஆசிரியர் வித்தியாசாகர், நிர்வாக குழுவினர் இணைந்து பரந்த அளவில் ஏற்பாடு செய்த இந்த தென்றல் ஆண்டு நிகழ்ச்சி, வழக்கமாக கோலாலம்பூர் ஈப்போ ஈப்போ சாலையில் (ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா) டைனஸ்டி தங்கும் விடுதியில் நடைபெறும் நிலை சற்று மாறுதலாக களும்பாங்கில் நடைபெற்றது.

இந்த ஆண்டு களும்பாங்கில் அமைந்துள்ள இளையோர் மறுமலர்ச்சி மையமான ‘மைஸ்கில்ஸ்’ அறவாரியத்தின் மாளிகையில் நடைபெற்றது.

இதில் தென்றல் இதழின் ஏராளமான வாசகர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து குவிந்திருந்தனர். இவர்களுடன் கல்வியாளர் முனைவர் என்.எஸ். இராஜேந்திரன், காவல்துறை மேநாள் ஆணையர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ‘இலக்கியச் செல்வர்’ டத்தோஸ்ரீ மு சரவணன், மைஸ்கில்ஸ் அரவாரிய தலைமை இயக்குனரும் ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் சி பசுபதி, புத்ரி மிளகாய் சாந்து நிறுவன உரிமையாளர் டத்தோ புத்ரி பரமசிவம், கல்வியாளர் முனைவர் இராஜகோபால், உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், டத்தோ புத்ரி பரமசிவம் உரையாற்றுவதற்கு முன், தென்றல் இதழில் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வாசகர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
கெடா மாநிலத்தின் ஆர்.வி. ரகு, பூச்சோங்கைச் சேர்ந்த காட்டுமல்லி ஆகிய இரு வாசகர்கள் சிறப்பிக்கப்பட்டனர்,

தொடர்ந்து தெய்வீகன் சிறப்புரை ஆற்றினார்.
“திருவள்ளுவருக்கு தெரியாத தெய்வம் இல்லை.
அகர முதல எழுத்தெல்லாம்-ஆதி
பகவன் முதற்றே உலகு
என்று சொன்ன திருவள்ளுவர், பிரிதோர் இடத்தில்,
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி உள்ளார்.

நாம் சிறப்பாக வாழ வேண்டுமெனில் அதற்கான உழைப்பை மேற்கொள்ள வேண்டும் அப்படி முற்பட்டால் இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்று காவல்துறை முன்னாள் அதிகாரியான அவர் பேசினார்.

தென்றல் ஆசிரியர் வித்தியாசாகர் முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசினார். மு. சரவணன் ஆற்றிய சிறப்புரை இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தை சேர்ந்த மாணவியரின் நடனமும் இன்னும் பல பாடல்களும் இடம்பெற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மகிழ்வித்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button