Malaysia

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வு பட்டறை அவை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்  பிரதமருக்கான சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் தகவல்

கோலாலம்பூர், மே 27- இந்திய சமூக நலனுக்காக பல முக்கிய முயற்சிகளைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாக பிரதமருக்கான சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் கூறினார்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக தற்போது மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியின் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமான தேவையாக இருப்பதை உணர்ந்து அதற்கென திட்டங்களை முறையாக வகுத்து வருவதாக சண்முகம் தெரிவித்தார்.

அந்த வகையில் முதல் முன்னெடுப்பாக, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வுப் பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறோம். பிரதமர் அலுவலகத்தோடு மலேசிய சினேஹம் அமைப்பு மற்றும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய துறை சார்ந்த நிபுணர்களோடு ஒருங்கிணைத்து இந்தப் பட்டறையை ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார்.

 

ஆசிரியர்கள் அதிகமான மன அழுத்தம் கொண்டவர்களாக இல்லாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மன இருக்கத்தின் அளவையும் பரிசோதிக்கும் முயற்சியும் உடன் செய்யப்படுகிறது.

இம்முன்னெடுப்பின் முதல் கட்டமாக கெடா மாநிலத்தில் இப்பட்டறை கடந்த 24.05.25 அன்று தேசிய வகை கூலிம் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் இப்பட்டறையில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்களின் மனவள நிலை அறியப்பட்டது. அவர்களிடமிருந்து பல கருத்துகளும் பெறப்பட்டன. இவ்வாறு மற்ற இடங்களிலும் பெறப்படும் தகவல்கள் மற்றும் கருத்துகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார் சண்முகம்.

இந்தப் பட்டறை தற்போது சில மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடைபெறுகிறது. இம்முயற்சி குறித்து துறைசார் நிபுணர்களுடன் இணைந்து திட்டமிட்டு இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்த்து இன்னும் பல சார்பு முயற்சிகளும் முன்னெடுக்கப்பட ஆவன செய்யப்படுகிறது. இது முற்றிலும் மனோவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இந்திய சமூக நலனுக்கான முன்னணி நபர்கள். அவர்களது மனநலம் சிறப்பாக இருத்தலே சமூகத்தின் நலத்திற்கான அடிப்படையாகும்.

ஆகையால், இந்த மனவள விழிப்புணர்வுப் பட்டறை ஒட்டுமொத்த சமூக மாற்றத்தின் முதல் படியாகக் கொள்ளலாம்.

இந்த நடவடிக்கைகள் இந்திய சமூகத்தின் எதிர்கால நலனுக்கான ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று .பிரதமருக்கான சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button