
11 PKR எம்.பி.க்கள் ஆதரவு விலகல் என்ற செய்தியில் உண்மையில்லை நம்பாதீர்கள்
கோலாலம்பூர், மே 29- பி.கே.ஆர். கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதாகப் பரவும் தகவல்கள், அண்மையில் சுமூகமாக முடிந்த உட்கட்சித் தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
கட்சித் தேர்தல் சீராக முடிந்ததை ஏற்காத தரப்பினர், குழப்பம் விளைவிக்கும் நோக்கில் இச்செய்தியைப் பரப்புகின்றனர். பி.கே.ஆர். தேர்தல் சீராக நடந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்த பொறுப்பற்றவர்களின் விரக்தியே இத்தகைய ஆதரவு விலகல் கதைகளுக்குக் காரணமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு கட்சியின் உள்விவகாரம். நாட்டின் நிர்வாகத்தை பாதிக்கக்கூடிய புவிசார் அரசியல் சவால்கள் உள்ள நிலையில், இத்தகைய உள்விவகாரத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவது தேவையற்றது. இது நாட்டின் செயல்பாட்டில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது.
பிரதமருக்கு எதிராக ஆதரவை விலக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டால், அது தவறானது. சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நிராகரித்தது கட்சி உறுப்பினர்களே தவிர, பிரதமர் அல்ல. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தைச் சீர்குலைக்க, எதிர்க்கட்சிகளிடம் புதிய பிரச்சினைகள் இல்லாததால், இது போன்ற புதிய கதைகளை உருவாக்குவதாகத் தெரிகிறது.



