Malaysia

சுங்கை பூலோவில் SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 311 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்

 

கோத்தா டாமன்சாரா, ஜூன் 21-
சுங்கை பூலோ தொகுதியைச் சேர்ந்த 2024ஆம் ஆண்டு SPM தேர்வில் 7A முதல் 11A வரையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 311 மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஊக்கத் தொகை வழங்கினார்.

யாசான் பேங்க் ராக்யாட் (YBR) மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து RM143,200 தொகையை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது.

மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு உத்வேகமளிக்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு கோத்தா டாமன்சாராவின் MBPJ செக்‌ஷன் 7 மண்டபத்தில் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாபெரும் விழாவில், டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தன் கனல் தெறிக்கும் உரையில் மாணவர்களின் கடின உழைப்பிற்கு இது ஒரு மகத்தான அங்கீகாரம் என்றும், கல்விதான் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிரதான திறவுகோல் என்ற நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

“இந்த ஊக்கத்தொகை வெறும் கல்வி வெற்றியின் சான்று மட்டுமல்ல, எதிர்காலத்தில் மாணவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க ஒரு சக்திவாய்ந்த உந்துதலாகவும் அமையும். இந்தப் பயணத்திற்குப் பக்கபலமாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அயராத பங்களிப்பையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்,” என்றார் டத்தோஸ்ரீ் ரமணன் தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் (Kerajaan Madani) இலக்குகளுக்கு ஏற்ப, கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான மேலும் பல அதிரடி முயற்சிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்த தனது அமைச்சகம் உறுதியுடன் இருப்பதாகவும் ரமணன் உறுதிபடத் சொன்னார்.

டத்தோஸ்ரீ ரமணனின் நேரடிப் பங்கேற்பும், ஊக்கமூட்டும் வார்த்தைகளும் மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தன.

YBR இன் அறங்காவலர் குழு உறுப்பினர் மற்றும் பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ மொஹட் இர்வான் மொஹட் முபாரக் பேசுகையில், இந்த ஊக்கத்தொகை நிதி ரீதியாக உதவுவதுடன், மாணவர்களின் தன்னம்பிக்கையை வானளாவ உயர்த்தும் ஒரு சக்திவாய்ந்த ஊசி மருந்து என்றார்.

“தொடர்ச்சியான அங்கீகாரமும் ஊக்கமும் மாணவர்களின் உந்துதலை மேம்படுத்துவதோடு, நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரை வலுப்படுத்துவதற்கும், உலக அளவில் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்,” என்றார் அவர்.

கல்விக்கான முதலீடு நாட்டின் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை எனவும், சமூகத்தில், குறிப்பாகக் குறைந்த வருவாய் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி மூலம் சமூகப் பொருளாதார நலனை மேம்படுத்துவதற்கான YBR இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இது என்றும் அவர் மேலும் கூறினார்.

சுங்கை பூலோவில் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பெருமையையும், நிதியுதவியையும் பெற்றுப் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button