
மித்ரா மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்கள் உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் பிரபாகரன் ஆவேசம்
மித்ரா மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்கள் உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
பிரபாகரன் ஆவேசம
பாங்கி, ஜூலை 5-
மித்ரா குறித்து குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்கள் அது குறித்த உண்மை நிலவரங்களை தெரிந்து பேச வேண்டும் என்று மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பி.பிரபாகரன் கூறினார்.
மித்ரா நிதிக்கு விண்ணப்பித்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மித்ரா குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இது போன்ற உண்மை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் தெரிவித்தார்.
மித்ரா நிதியுதவி (கிராண்ட்ட்) குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சமூக ஊடகங்களில் என்னை கடுமையாக சாடி வருகின்றனர். இவை எல்லாம் எனக்கு தெரியும். ஆனால் மித்ரா முறையாக செயல்பட்டு வருவது அவர்களுக்கு தெரியாது என்று பிரபாகரன் சொன்னார்.
மித்ரா விவகாரத்தில் மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. கிராண்ட்டுக்கு விண்ணப்பம் செய்த பல அரசு சார இயக்கங்கள் மித்ராவின் விதிமுறைகளை பின்பற்றவில்லை.
பல அரசு சாரா இயக்கங்களுக்கு முறையான கணக்கறிக்கைகள் கூட இல்லை.
இந்த சூழ்நிலையில் எப்படி நிதி வழங்க முடியும்? அந்த நிதியை கொண்டு சம்பந்தப்பட்ட அரசு சாரா இயக்கங்கள் எப்படி மக்களுக்கான திட்டங்களை மேற்கொள்ள முடியும்?
இதன் அடிப்படையில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெரியாதவர்கள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர் என்று பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
மித்ராவின் அனைத்து திட்டங்களும் அது தொடர்பான அறிக்கைகளும் அந்த பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது 2024ஆம் ஆண்டுக்கான மித்ராவின் அறிக்கை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
ஆகையால், மித்ரா முறையாகவே செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று
தன்னுடைய மிகப்பெரிய கோரிக்கை என்றார் பிரபாகரன்.
மித்ரா குறித்து எடுத்தோம்-கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க அது ஒன்றும் கத்திரிக்காய் வியாபாரம் அல்ல என்று மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் பி.பிரபாகரன் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.



