
இந்தியர் சமூகத்திற்கான விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்த வேண்டும் டத்தோஸ்ரீ சரவணன் – நூருல் இசா மோதலுக்கு பிரபாகரன் பதில்
இந்தியர் சமூகத்திற்கான விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்த வேண்டும்
டத்தோஸ்ரீ சரவணன் – நூருல் இசா மோதலுக்கு பிரபாகரன் பதில
கோலாலம்பூர், ஜூலை 5,
இந்தியச் சமூக விவகாரங்கள் குறித்து பிகேஆர் துணைத்தலைவர் நூருல் இசா மற்றும் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவருக்கும் இடையே மூண்டிருக்கும் வெளிப்படையான வார்த்தைப் போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை வட்ட மேஜையில் விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று மித்ரா பணிக்குழு தலைவர் பி.பிரபாகரன் கூறினார்.
மித்ரா விவகாரம் குறித்து இந்திய சமூகம் கொதித்தெழுந்துள்ள நிலையில் சார்ல்ஸ் சந்தியாகோ இஸ்திசாம் மலேசியா அறவாரியம் கீழ் திட்டங்களை அறிவித்த போது மித்ரா விவகாரம் குறித்து பேசப்பட்டது. நூருல் இசா கொடுத்த செய்தியை சார்ல்ஸ் சந்தியாகோ வாசித்தார். அதன் பிறகு நூருல் இசா விவகாரத்தை டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பொதுவெளியில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் ஆரோக்கியமற்ற போக்கைத் தவிர்க்க, உடனடியாக சுற்று மேசை அமர்வு நடத்த வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விரல் நீட்டிச் சண்டையிடும் களமாக மாறக் கூடாது.
இந்த வார்த்தைப் போர் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும், சமூகத்திற்கு எந்தவித உறுதியான பலன்களையும் அளிக்காது என்று பிரபாகரன் எச்சரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசு மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), சிவில் சமூகப் பிரதிநிதிகள், கொள்கை வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்று விவாதிக்க வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
இந்த சுற்று மேசை அமர்வின் மூலம் இந்தியச் சமூகத்தை இலக்காகக் கொண்ட தற்போதைய முயற்சிகளைப் புறநிலையாக மதிப்பீடு செய்வதும், முன்வைக்கப்படும் எந்தவொரு கருத்துக்கும் ஆதாரங்களை முன்வைப்பதும், மேலும், பயனுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தீர்வுகளை உருவாக்குவதுமே ஆகும் என்று பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.



