
தேசிய தினக் கொண்டாட்ட வாரத்தில் சிறப்பிக்கப்படும் மலேசிய சாதனையாளர்கள்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 13-
சாதனை புத்தகம், பெர்னாமா தொலைக்காட்சியுடன் இணைந்து “மலேசியா லுவார் பியாசா” Malaysia Luar Malaysia எனும் தொலைக்காட்சித் தொடரை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி ஒளியேற்றவுள்ளது.
13 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறப்பு ஒளிப்பதிவு, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இரவு மணி 8:30 க்கு பெர்னாமா தொலைக்காட்சியில் (ஆஸ்ட்ரோ 502) ஒளிபரப்பாகும்.
எவரெஸ்ட் மலையேறிய முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற்ற டத்தோ எம். மகேந்திரன், உலகத் தரம் வாய்ந்த கோபுர ஓட்டப்பந்தய வீரர் சோ வை சிங், எஸ்.டி. ரோஸ்யம் போன்ற வெற்றிகரமான உள்ளூர் நிறுவனங்கள் உட்பட 30 முதல் 40 மலேசிய சாதனையாளர்களின் ஒரு சாதனைப் பயன தொடராக இது ஒளியேறும்.
இத்தொடர் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, தங்கள் சாதனைகள் மூலம் நாட்டைப் பெருமைப்படுத்திய மலேசியர்களுக்கான ஓர் அங்கிகாரம் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
“சுவாரஸ்யமாக, இத்தொடர் தேசிய தின கொண்டாட்ட வாரத்தில் முதல் தொடராக ஒளிபரப்பப்படும். இது நாட்டின் சுதந்திரத்தை மட்டுமல்ல, மலேசியர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதால் இன்னும் சிறப்பானதாக அமைகிறது,” என மலேசிய சாதனை புத்தக 30-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து, உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மலேசிய சாதனை புத்தக 30-ஆம் ஆண்டு விழாவில் நாடு முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட கௌரவ விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
அதோடு, டத்தோ எம். மகேந்திரன் உட்பட பல மலேசிய சாதனையாளர்களின் ஊக்கமளிக்கும் சிறப்பு நேர்காணல்கள் இவ்விழாவை மேலும் சிறப்பித்தது.



