Malaysia

மலேசிய சுற்றுலா துறை தீபாவளி விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் வெளிநாட்டுக் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்த வேண்டாம் ! DSK தலைவர் டத்தோ சிவக்குமார் அறிவுரை

கோலாலம்பூர், அக்.10- மலேசியாவின் உள்ளூர் கலாச்சார உணர்வுகளை நன்குணர்ந்து செயல்படுமாறு மலேசிய சுற்றுலா துறைக்கு (Tourism Malaysia) Team DSK அமைப்பின் தலைவர் டத்தோ சிவக்குமால் வலியுறுத்தியுள்ளார். மலேசிய சமூகத்துடன் தொடர்பில்லாத Halloween போன்ற வெளிநாட்டுக் கலாச்சாரத்தை விளம்பரப்படுத்துவதை விட, தீபாவளி போன்ற உள்ளூர் பண்டிகைகளின் விளம்பரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியா பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட நாடு என்பதால், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரங்கள் நாட்டின் தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்க வேண்டும் டத்தோ என். சிவக்குமார் வலியுறுத்தினார். “மலேசியா ஒருபோதும் மற்ற கலாச்சார நடைமுறைகளைத் தடுக்கவில்லை, உண்மையில், இந்த வேறுபாடுதான் நம் நாட்டின் பலமும் தனித்துவமுமாகும். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி போன்ற உள்ளூர் பண்டிகைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் சில பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன” என்று டத்தோ சிவக்குமார் சொன்னார். “அண்மையில் Tourism Malaysia Sunway Lagoon-இல் நடைபெற்ற Nights of Fright 11 என்ற Halloween கருப்பொருளைக் கொண்ட ஒரு நிகழ்வை விளம்பரப்படுத்தியது. இது பலரின் கண்டனத்தைப் பெற்றது. இந்த கலாச்சாரம் உள்ளூர் சமூகத்துடன் தொடர்பில்லாததால், இது அதிகாரப்பூர்வ விளம்பரப் பொருளாக இருக்கக் கூடாது,” என்று டத்தோ சிவக்குமார் ஒரு அறிக்கையில். அவ்வாறு தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளை மலேசியாவுக்கு ஈர்க்கும் அரசாங்க நிறுவனமாக, Tourism Malaysia வெளிநாட்டு தாக்கங்களை மட்டுமே காண்பிக்கும் நிகழ்வுகளை விடுத்து, மக்களின் கலாச்சார விழுமியங்களையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். “இந்துக்களின் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடவிருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகையின் ஒளியின் திருவிழாவை Tourism Malaysia முன்னிலைப்படுத்துவது மிகவும் நல்லது. இந்த விழாப் பருவத்தில் பல சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன, இவைதான் நாட்டின் விளம்பரத்தின் முக்கியக் கவனமாக இருக்க வேண்டும்,” என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார். Visit Malaysia 2026 பிரச்சாரம் நெருங்கும் வேளையில் உள்ளூர் கலாச்சார உணர்வுகளைப் புண்படுத்தாத உள்ளடக்கம் இருப்பதை Tourism Malaysia உறுதி செய்ய வேண்டும். மலேசிய சுற்றுலா துறை சுற்றுலா விளம்பரங்களில் தெளிவான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் தெளிவுபடுத்தினார். பல இன மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மலேசியக் கலாச்சாரத்தின் அழகை உணர ஏதுவாக, வர்த்தக மையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளூர் பண்டிகைகளை அலங்கரித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு டத்தோ சிவக்குமார் வேண்டுகோள் விடுத்தார். “இந்த Halloween கருப்பொருள் நிகழ்வுகளின் விளம்பரம் தேசிய கலாச்சார உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. எந்த விளம்பர வடிவமாக இருந்தாலும், அது உள்ளூர் அடையாளத்தை மையமாகக் கொண்டதாகவும், நாட்டின் நல்லிணக்கத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கட்டும். மலேசியா அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது, இங்குள்ள கலாச்சாரங்கள் அனைவரும் சேர்ந்து உணரப்பட வேண்டும்,” என்று டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button