
கல்வி ஒன்றே எதிர்கால பற்றுக்கோடு: எஸ்பிஎம் தேர்வில் அமரும் மாணவர்களுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து
கோலாலம்பூர், ஜன.30:
எஸ்பிஎம் தேர்வில் அமரும் 3 இலட்சத்து 95ஆயிரத்து 870 மாணவர்களுக்கும், குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மஇகா சார்பில் அதன் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேச்சுத் தேர்வு ஜனவரி 8-யிலேயே தொடங்கிவிட்டாலும் எழுத்துப்பூர்வ தேர்வு ஜனவரி 30-இல் தொடங்கி மார்ச் 7-ஆம் நாள்வரை தொடர்கிறது. கல்வி மேம்பாடுதான் எதிர்கால பற்றுக்கோடு என்பதாலும் மாணவர்களுக்கு உயர்க்கல்விப் பயணத்தின் திருப்புமுனையாக இந்தத் தேர்வு அமைவதாலும் அனைத்து இந்திய மாணவர்களும் இந்தத் தேர்வை சிறப்பாக எழுதி சாதனை மாணவர்களாகத் திகழ வேண்டும் என்று மஇகா மனதார விரும்புகிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
எம்ஐஇடி என்னும் கல்விக் கரம், டேஃப் தொழில் நுட்பக் கல்லூரி, பன்னாட்டுத் தரத்திலான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் உங்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்ட மஇகா என்றென்றும் தயாராக இருக்கிறது தான்ஸ்ரீ என்று விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய எஸ்பிஎம் தேர்வில் அமரும் அனைத்து இந்திய மாணவர்களும், சாதனைஇளைஞர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ளும் வகையில் இந்தத் தேர்வை எழுத வேண்டும். இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில், மஇகா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள், இடைநிலைக் கல்வி மாணவர்கள், தொடர்ந்து உயர்க்கல்வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்பதுடன் அல்லாமல், கல்வியில் பின் தங்கிய மாணவர்களையும் விட்டுவிடாமல் அவர்களுக்கு தொழில்கல்வி வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு மஇகா தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. இதை கடந்த கால சரித்திரம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டி உள்ளார்.
யூபிஎஸ்ஆர் தேர்வில் 7-ஏ, 8-ஏக்கள் பெற்று சிறந்த அடைவு நிலையுடன் தேர்ச்சிபெறும் மாணவர்களை மேலும் உற்சாகப் படுத்தும் விதமாக அவர்களுக்கு சிறப்பு செய்வது, மஇகா முன்னாள் தேசிய தலைவர் துன் ச.சாமிவேலு காலத்தில் தொடங்கப்பட்டது. அப்படிப்பட்ட மாணவர்களை அழைத்து சான்றிதழும் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டன.
தொடக்கத்தில் 160 மாணவர்களுக்கு ஐந்நூறு வெள்ளிக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து, யூபிஎஸ்ஆர் தேர்வு நிறுத்தப்பட்ட நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நிதி அளிக்கப்பட்டது.
மஇகா-வின் கல்விக் கரமான எம்ஐஇடி மூலம் இந்த உதவி நல்கப்பட்டது. ஆண்டுதோறும் புத்ரா உலக வாணிக மையம் போன்ற தரமான அரங்குகளுக்கு அழைக்கப்பட்ட யூபிஎஸ்ஆர் மாணவர்களின் பெற்றோரும் சிறப்பிக்கப்பட்டனர்.
தவிர, யூபிஎஸ்ஆர் தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் இலவசமாக நடத்தப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களும் கையேடுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. சிறந்த அடைவு நிலையை எட்டிய தமிழ்ப் பள்ளிகளும் சிறக்கப்பட்டு, அதன்வழி மற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டது.
இதைப்போல, பிடி3 என்று பெயர் மாற்றப்பட்ட பிஎம்ஆர் மாணவர்கள், மலேசிய கல்விச் சாந்திதழ் தேர்வு என்னும் எஸ்பிஎம் தேர்வு மாணவர்களுக்கும் இலவச கையேடுகள், பயிற்சிப் புத்தகங்களுடன் பயிற்சிப் பட்டறைகள் எம்ஐஇடி மூலம் நடத்தப்பட்டன. குறிப்பாக, எஸ்பிஎம் தேர்வில், தமிழ்-தமிழ் இலக்கியப் பாடங்களை எடுத்த மாணவர்கள்மீதும் தனி அக்கறை செலுத்தப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, உயர்க் கல்வி மாணவர்களுக்கும் உரிய வசதியையும் உதவியையும் மஇகா ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தகுதி இருந்தும் பொது பல்கலைக்கழங்களில் இடம் கிடைக்காத மாணவர்களை தேசிய அளவில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு மஇகா கல்விக் குழுவின் மூலம் உரிய ஏற்பாட்டை மஇகா மேற்கொண்டு வருகிறது.
அந்த நிலையிலும் விடுபடும் மாணவர்களுக்கு, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நிதி சிக்கலால் மாணவர்களின் கல்விப் பயணம் தடைபடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கல்வி உதவி நிதியும் அளிக்கப்படுகிறது. மேலும், பொருத்தமான மாணவர்களுக்கு கல்விக் கடன் வசதியும் அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, மஇகா-விற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அதிக அளவில் கல்வி உதவி நிதி அளிக்கப்படுகிறது. இதுவரை, வெ.200 மில்லியனுக்கு அதிமாக கல்வி உதவி நிதி நம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டேஃப் கல்லூரி மூலம் ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கியுள்ள எம்ஐஇடி, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின்வழி ஆயிரக் கணக்கான மருத்துவர்களை உருவாக்கி இந்த சமூகத்திற்கு மஇகா அளித்துள்ளது.
இந்தத் தகவலை யெல்லாம் இந்த வேளையில் குறிப்பிடுவதற்கு காரணம், எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதலையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காகவே.
எனவே, எஸ்பிஎம் தேர்வில் சாதனை மாணவர்களாக உருவாகுங்கள். உங்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல மஇகா-வும் அதன் கல்விக் கரமான எம்ஐஇடி-யும் தயாராக இருக்கின்றன என்று, எஸ்பிஎம் தேர்வில் அமரும் மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



