CinemaMalaysia

சினிமா கூத்தாடிகளுக்கு ஆதரவு அமோகம்! ஆலயம், தமிழ்ப்பள்ளிகள், பொதுநிகழ்ச்சிகளுக்கு உதவ மனம் இல்லையா? எங்கே செல்கிறது இந்திய சமுதாயம்?

கோலாலம்பூர்,பிப்.24-

மலேசியாவில் ஆலயங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும்
உள்ளூர் பொதுநிகழ்ச்சிகளுக்கும் உள்ளூர் கலைஞர்களுக்கும் ஆங்காங்கே பணத்திற்காக கையெந்திக் கொண்டிருக்கும் நிலையில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கூத்தடிக்கும் சினிமாக்காரர்களை பார்க்கும் போது பலரது மனம் வலிக்கவே செய்கிறது.

நாம் இங்கு ஒரு ஆலயத்தை கட்ட படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம், தொழிலதிபர்கள் பொதுமக்கள் என்று கையெந்திக் கொண்டிருக்கிறோம். இதில் எத்தனை பேர் ஆலயம், தமிழ்ப்பள்ளிகளுக்கு பணம் கொடுப்பார்கள்? எத்தனை தொழிலதிபர்கள் பணம் தருவார்கள்? இது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தமிழ்ப்பள்ளிகள், இங்கு நடக்கும் பொது நிகழ்ச்சிகளுக்குக்கூட கையெந்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இங்கு வரும் சினிமா கூத்தாடிகள் வலிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு செல்கிறார்கள் என்பது மனதை மேலும் மேலும் வலிக்கவே செய்கிறது.

சினிமாக்காரர்களை மலேசியாவிற்கு அழைத்து வரும் மலேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருமானம் சம்பாதிப்பது எங்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் மகிழ்ச்சிதான். அது உங்கள் பிஸ்னஸ். இது குறித்து நாங்கள் கேள்வி கேட்க உரிமை இல்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.ஆனால், இங்கு ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், உள்ளூர் நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்கள் என்று பலரும் அவர்கள் நலனுக்காக மலேசிய தொழிலதிபர்கள், இந்திய சமுதாய மக்களிடம் கையெந்தும் வேளையில் அவர்களுக்கு யாரும் கைகொடுப்பதில்லை
ஆனால், சினிமா கூத்தாடிகளுக்கு பல லட்சம் வெள்ளி சம்பாதிக்க உடனடியாக கைகொடுப்பது மனதை வலிக்கவே செய்கிறது.

மலேசியாவில் பல தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு எத்தனை பேர் உதவி வழங்கியிருக்கிறார்கள்? அது போலவே நமது ஆலயங்களுக்கு உதவி வழங்குவது யார். நமது ஆலயம் நமது பொறுப்பு என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்?

நாட்டில் ஆலயம் தேவைதானா என்று கேள்வி கேட்பவர்களும் உண்டு. ஆலயம் தேவையில்லை என்றால் சமயம் தேவை இல்லை என்றுதானே அர்த்தம்? அப்படியானால் ஆலய திருவிழாக்கள் எதற்கு எனும் கேள்வியும் இத்தகைய பொறுப்பற்றவர்களுக்கு கூடவே எழும். இதையெல்லாம் நாம் பொருட்படுத்தவே கூடாது.

நாம் ஒன்றை மட்டும் உணர வேண்டும். நமது ஆலயம் நமது பொறுப்பு. அவ்வளவுதான். நமது ஆலயத்தை கட்டி முடிக்க நமது மலேசிய தொழிலதிபர்கள், இந்திய சமுதாய மக்கள் கைகொடுக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இது குறித்து பல ஆலயங்கள் நிதியுதவி கேட்டது மனதை நெகிழ வைத்தது.

நாட்டில் பல ஆலயங்களின் திருப்பணி இந்த நிதியில்லாதது காரணமாக தடைபட்டுள்ளது.
இந்த நிதி கோரிக்கைக்கு செவிசாய்த்து நாட்டில் இருக்கும் பல ஆலயங்களை கட்டி முடிக்க உதவலாம். தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவலாம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவலாம்.

ஆனால், எத்தனை பேர் உதவினார்கள் என்று
தெரியவில்லை. ஆனால், சினிமா கூத்தாடிகளுக்கு வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள். அந்த பணத்தை ஆலய திருப்பணிகளுக்கு வழங்கியிருந்தால் அவற்றின் கட்டுமானப்பணியை முடித்திருக்கலாம். அவர்கள் சினிமா கூத்தாடிகளுக்கு வாரி வாரி வழங்கியது மனதை வலிக்கவே செய்கிறது.

ஒரு சினிமா நடிகர், நடிகை அல்லது பாடகர்களை அழைத்தால் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் அல்லது அதற்கும் மேல் பணம் வழங்க வேண்டும். அவர்களுக்கு பிஸ்னஸ் கிளாஸ் விமான டிக்கெட், ஐந்து நட்சத்திர ஹோட்டல், உணவு, போக்குவலத்து, பாதுகாவலர் என்று பலவற்றை வழங்க வேண்டும். இவர்களுக்கு ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் ஆதரவு வழங்குகிறது. ஆனால், மலேசிய தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சினிமாக்கூத்தாடிகள் பணம் தருவார்களா?

மலேசிய ஆலயம், தமிழ்ப்பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட சினிமாக்கூத்தாடிகள் நிதி வழங்கி உதவுவார்களா? கண்டிப்பாக ஒரு பைசாக்கூட கொடுக்கமாட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க மலேசியாவில் நிகழ்ச்சி நடத்தி அந்த கடனை அடைத்தார்கள். ஆனால் நடிகர் விஷால் மலேசிய கலைஞர்கள் சங்கத்திற்கு ஒரு லட்சம் வெள்ளி நிதி தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

ஆனால் இன்று வரையில் அந்தப்பணம் வரவில்லை. அப்படியே அமைதியாகி விட்டார்கள். நமது பணம் அங்கு போய் விட்டது. ஆனால், அவர்கள் சொன்ன பணம் வரவில்லை. நாம் என்ன ஏமாளிகளா? நிலைமை இப்படியிருக்க நாம் ஏன் சினிமா கூத்தாடிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்?

நாட்டில் இன்னும் எத்தனையோ தமிழ்நாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கவுள்ளதாக தெரிகிறது. அந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கவிருக்கும் தொழிலதிபர்கள், இந்திய சமுதாய மக்கள் முதலில் ஆலய திருப்பணிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

நமது ஆலயம் நமது பொறுப்பு.
நமது தமிழ்ப்பள்ளி நமது பொறுப்பு.
நமது கலைஞர்கள் நமது பொறுப்பு.
நமது சமுதாயம் நமது பொறுப்பு.
நமது பொதுநிகழ்ச்சிகள் நமது பொறுப்பு.
மலேசிய தொழிலதிபர்கள், மலேசிய இந்திய சமுதாய மக்கள் இதனை உணர்வார்களா?

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button