
சாதனை தலைவர் துன் ச.சாமிவேலு குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் எண்ணத்தில் உதித்து மனதில் மலர்ந்த கவிதை…
கண் இமையாய் வாழ்கிறாய்…
எந்தையிலும் சிந்தனையிலும்
என்னில் கலந்த
ஏற்றமிகு தலைவரே
ஏழிசை நாதமே…!
அறியாத வயதில்
அரசியல் அரிச்சுவட்டை
அள்ளித் தந்த வள்ளலாய்
அட்சயப் பாத்திரம் நீங்கள்
கொள்கை வடிவாய்
கோலோச்சும் உங்கள் புகழில்
கோடிட்ட இடத்தை நிரப்பும்
கோடித் தொண்டனில் நான் ஒருவன்…
நீங்கள் நடந்து வந்த கம்பீரம்
நீடித்து நின்ற நாட்கள்
நிலையாய் நின்றது
நின்றது போல் நிலைத்தன…
தந்தையாய்– தலைவராய்
தலைமையேற்ற தமையனாய்
தன்னிகரில்லாத தமிழ்த் தலைவராய்
தலைநிமிர்ந்தாய் – தலைகொடுத்தாய்…
சரித்திரத்தின் நாயகனாய்
சான்றாப் புகழாய் நின்று
சரிநிகர் தமிழர் சாட்சியாய்
சமுதாய வேர்கொண்டாய்…
கல்விக்கோர் கருணையாய்
காலமெல்லாம் கண்விழித்து
கலங்கரை விளக்கமாம் – ஏய்ம்ஸ்ட்
கலாசாலையை அமைத்தாய்
வீட்டுக்கொரு பட்டதாரியை
வீதியெல்லாம் புகழ்பரப்ப
விதியை மாற்றப் புறப்பட்டாய்
விதைத்தாய் புதிய வரலாற்றை…
பூகம்பமாய் வந்தாலும் –உன்
புன்னகையால் – சமூகம்
பூரிப்பானது புதுயுகம் கண்டது
புவியெல்லாம் மணம் வீசியது…
இருந்தாலும் இறந்தாலும்
இதயம் முழுவதும் நிரம்பினாய்
இன்று பிறந்த நாளிலும்–கண்
இமையாய் இருக்கிறாய் தலைவா…

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



