Malaysia

துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் செயல்கள்தான் அரசியல் சாயம் பூசும் வகையில் உள்ளது கூட்டரசு பிரதேச ம.இ.கா மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் எஸ் சுந்தரராஜா சாடல்

தேசம் செய்திகள் – குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.6 –
பத்துமலையில் ம.இ.கா நடத்த உள்ள சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தை கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் செயல்கள்தான் அரசியல் சாயம் பூசும் திட்டமிடலுக்கு முன்னுதாரணமாக உள்ளது என கூட்டரசு பிரதேச ம.இ.கா மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் எஸ் சுந்தரராஜா கடுமையாக சாடியுள்ளார்.

இந்த சிறப்பு பிரார்த்தனை அரசியல் நோக்கமற்றது. இது மலேசிய இந்திய சமூகத்தின் மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே. முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்காக முன்னெடுக்கப்படும் இந்த சிறப்பு பூஜை நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஆனால், செனட்டர் சரஸ்வதி இதை அரசியல் நாடகமாக படம் பிடித்து காட்டுவது அவருடைய தன்னிச்சையான நகைச்சுவை என்பதையே காட்டுகிறது என்று ஆறுமுகம் ஒரு அறிக்கையில் கூறினார்.

“தங்கள் தலைவர் ஆலயத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது எங்கு போனது உங்கள் ஒழுங்கு மறுமொழி?” என்று கேள்வி எழுப்பிய ஆறுமுகம், அரசியல் தேவைகளுக்காக நீங்கள் மதத்தலங்களை பயன்படுத்தும் போது தோன்றாத தார்மீக எழுச்சியை, இன்று ம.இ.கா மீது அரசியல் பழிவாங்கலுக்காக மட்டும் காட்டுவது சரியானது அல்ல என்றார் ஆறுமுகம்.

பத்துமலை திருத்தலம் ஆலயம் மட்டுமல்ல. மாறாக மலேசிய இந்தியர்களின் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. மதவிழாக்களும் கூட்டங்களும் அங்கு நடைபெறுவது புதிதல்ல. இதே வழியில் ம.இ.கா நடத்தும் இக்கூட்டமும் ஆலயத்தின் மரியாதையையும், புனிதத்தையும் குன்றவைக்காது. “சிறப்பு பூஜை அரசியல் அல்ல; மதத்தின் வெளிப்பாடு,” என ஆறுமுகம் வலியுறுத்தினார்.

சட்டத்தின் மரியாதை
போலீசாரின் அறிவுரைகளை மதித்து, ம.இ.கா கூட்டத்தை அமைதியான முறையில் நடத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், இதை சட்ட மீறலாக சித்தரிக்க முயற்சிப்பது, ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியாக செனட்டர் சரஸ்வதியின் கடமைகளை கேள்விக்குறி ஆக்குகிறது.

ஒற்றுமையை குழைக்கும் செயல்பாடுகள்
நாட்டின் ஒற்றுமைக்கு முறைசாரா கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகள் அச்சுறுத்தல் அளிக்கின்றன. “வழிபாட்டுத் தலங்களை குற்றம்சாட்டியதன் மூலம் செனட்டர் சரஸ்வதி ஒற்றுமையை மேம்படுத்துவதற்குப் பதிலாக குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்,” என்று அருமுகம் சாடினார்.

மலேசிய இந்திய காங்கிரஸ், சமூகத்தின் நலனுக்காகவும் மத நம்பிக்கைகளுக்கான உரிமைக்காகவும் தொடர்ந்து செயல்படும் என்று ஆறுமுகம் உறுதிபட தெரிவித்தார்.

“மொத்த இந்திய சமூகத்தின் நம்பிக்கைகளை பலவீனப்படுத்தும் எந்த அரசியல் விளையாட்டிற்கும் ம.இ.கா இணங்காது,” என்று ஆறுமுகம் மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button