
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் வெற்றி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வாழ்த்து
கோலா குபு பாரு,மே 11- கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவிற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜ.செ.க சிலாங்கூர் மாநில அமைப்பின் துணை செயலாளருமான பாப்பாராய்டு வீ்ரமன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அதேநேரத்தில் வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் பாப்பாராய்டு வீரமன் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இம்முறை இடைத்தேர்தலில்
அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரின் முன்வாக்கு பதிவில் கிடைத்த முடிவில் பெரும்பான்மை ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பதை மேற்கோள்காட்டி நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் இதுவே முதல் முறை என தமது மகிழ்ச்சியினை அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த வாக்குபதிவில் பூர்வகுடியினர் அதிக அளவில் வாக்களிக்க வெளிவந்தது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று எனவும் இம்முறை கிடைத்த தேர்தல் முடிவுகளில் எதிர் தரப்பினர் இதுவரை மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் மீது சுமத்திய அவதூறான கூற்றுகளுக்கு ஒரு மிகச்சிறந்த பதிலடியாக கோலா குபு பாரு மக்கள் நிரூபித்திருப்பதை கண்டு மனம் நெகிழ்வதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
சவால்கள் பல வந்தாலும், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளான பி.கே.ஆர், அமானா, அம்னோ, ம.இ.கா, ஐ.பி.எப் மற்றும் பி.பி.பி முன்னணி தலைவர்கள், உறுப்பினர்கள், அரசுசாரா இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து 2 வாரங்களாக தேர்தல் களமிறங்கி வாக்கு வேட்டையில் வேட்பாளருடன் கை கோர்த்து இன்றைய வெற்றிக்கு கடினமாக உழைத்ததை நினைவுகூர்ந்து பாப்பாராய்டு நன்றி கூறினார்.
இந்த இடைத்தேர்தல் முடிவு மக்கள் அரசாங்கத்தின் மீதும் நம் பிரதமர் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி ஆகியோரின் ஒற்றுமை அரசாங்கத்தில் பல்லின மக்களின் ஆதரவில் வெற்றி வாகை சூடிய ஆளும் கட்சி வேட்பாளர் பாங் சோக் தாவ் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மக்களின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த தொடர்ந்து சிறப்பான முறையில் சேவையை தொடர்வார் என தான் நம்புவதாக பாப்பாராய்டு சொன்னார்.



