Malaysia

பத்துமலை தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

கோலாலம்பூர், மே 29-
‘திறன்மிகு இலக்கவியல் ஆசிரியரே மேன்மைமிகு நாட்டின் எதிர்பார்ப்பு.’
எனும் இவ்வாண்டிற்கான ஆசிரியர் தினக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு ஆசிரியர் தினக் கொண்டாட்டம் மாறுபட்ட முறையில் அமைய வேண்டும் என பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன்
முன்னதாகவே சில செயல் திட்டங்களைப் பள்ளியின் ஆசிரியர் கழகத்தின் உதவியுடன் வகுத்தார்.

முறையே இக்கொண்டாட்டம் ஆசிரியர், மாணவர் என்ற வரையறைக்குள் நிற்காமல்,
ஒரு பள்ளியின் தினசரி செயல் திட்டங்களுக்கும் ,அதன் வெற்றிக்கும் வகை செய்யும் பள்ளியின் அலுவலகப் பணியாளர், பாலர்ப் பள்ளி உதவியாளர்கள் ,பாதுகாவலர்கள்,தூய்மை
பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர், அதன் பணியாளர் ஆகியோரையும் கெளரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் காலை மணி பத்துக்கு
பள்ளியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் அணிவகுப்பின் வழி தொடக்கம் கண்டது.
மாணவன் சரவணா இறை வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். பள்ளியின் மாணவர்த் தலைவர்கள் நிகழ்ச்சி நெறியாளர்களாகச் செயல்பட்டு,நிகழ்ச்சியை வழிநடத்தி சென்றது முத்தாய்ப்பாய் அமைந்தது.

இந்நிகழ்ச்சியின் பிரதான அங்கமாக பள்ளி பணியாளர்களின் கெளரவிப்பு அமைந்தது.
பள்ளியின் தலைமையாசிரியர் பணியாளர் அனைவருக்கும் சால்வை போர்த்தி சந்தன மாலை அணிவித்தார்.

அன்றைய தினம் அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் கழகம் விருந்தோம்பலும் ஏற்பாடு செய்தது.
இக்கெளரவிப்பு பணியாளர்களை வெகுவாக மனம் நெகிழச் செய்தது. சிலர் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர் ஆசிரியப் பெருமக்களையும் உருக்கியது.

பொருள் பொதிந்த ஆசிரியர் கொண்டாட்டம் இதுவே.தொடந்து, பள்ளியின் மாணவர் நலத் துணைத்தலைமையாசிரியர் திருவாளர் விக்டர் ஆசிர்வாதம் தலைமையில் தயார் செய்யப்பட்ட மாணவர்களின் குழு படைப்பு, நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.
அதோடு, மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்களும் தங்களின் தனித்திறமைகளை ஆடல்,பாடல் மற்றும் காட்சியும் கானமும் வழி காட்டினர்.

பள்ளியில் மாலையில் பயிலும் மாணவர்களுக்கும் ஆடல் பாடல் அங்கங்கள் நடந்தேறின. அவர்களை மகிழ்விக்கும் வகையில் கோமாளி ஒருவர் வரவழைக்கப்பட்டு மனமகிழ் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.

பள்ளியின் ஆசிரியர் கழகத்தின் தலைவி ஆசிரியை ரஜீவி வீரன் அவர்களின் நன்றியுரையுடன் இக்கொண்டாட்டம் ஒரு நிறைவை அடைந்தது.
இந்நிகழ்ச்சிக்குப் பக்கபலமாய் விளங்கிய பள்ளியின் அறங்காவலர் தான்ஶ்ரீ டாக்டர் R.நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் ஆகியோருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button