
SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடர மடானி அரசாங்கம் உறுதுணையாக இருக்கும்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
கோலாலம்பூர், ஜூலை 2-
மெட்ரிகுலேஷன் அல்லது உயர்கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த SPM தேர்வில் 10A அல்லது மேலும் சிறப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களின் எண்ணிக்கையை மலேசியக் கல்வி அமைச்சகம்,உயர்கல்வி அமைச்சகத்துடன் இணைந்து பரிசீலனை செய்யும்.
இதன்வழி, தேர்வின் அடிப்படையில் இடம் வழங்கப்படாத மாணவர்களின் பட்டியலை மீண்டும் சரிசெய்ய இது உதவும்.
SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற B40 குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதே நேரத்தில், கல்வி அமைச்சகத்தின் மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான பூமிபுத்ராவுக்கான மொத்த கோட்டா விழுக்காடின் அமைப்பு பாதிப்படையாமல் உறுதி செய்வதற்கே இம்முடிவு எடுக்கபட்டதாக மலேசிய கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
“நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்களின் நலனுக்காக கல்விக்கான தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்வதில் மடானி அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக ” அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பிரதமரின் அறிவுறுத்தலுக்கேற்ப மதம், இனம், வேற்றுமை பாராமல் 10A மற்றும் அதற்கும் மேல் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற SPM மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடங்கி மெட்ரிகுலேஷன் மட்டத்தில் படிப்பைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இம்முடிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் பூமிபுத்ரா ஒதுக்கீட்டை உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.



