
100 வெள்ளி மட்டும் அபராதமா? இணையபகடிவதை சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் டத்தோ ந.சிவக்குமார் வலியுறுத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஜூலை 18-
அரசாங்கம் இணைய செயல்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்க அது தொடர்பான திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று DSK எனும் டைனமிக் சினார் சமூகநல அமைப்பின் தலைவரான டத்தோ ந.சிவகுமார் கூறினார்
இணையபகடிவதை சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டமசோதாவை முன்வைத்து இணையச் சட்டத்தை 2/3 பெரும்பான்மையுடன் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஈசா விவகாரத்தில் ஒரு பெண்ணுக்கு 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோ சிவக்குமார் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த இணைய பகடிவதையால் இன்னொரு உயிர் பலியாகக் கூடாது. அதுவரை காத்திருக்காதல் விரைந்து கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என்று டத்தோ சிவக்குமார் தமது கருத்தை வெளியிட்டார்.
ஈஷா இணைய பகடிவதை வழக்கு தொடர்பாக டுலால் பிரதர்ஸ் மற்றும் ஷாலினி இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இதில் ஷாலினிக்க 100 வெள்ளி மட்டும் அபராதம் விதித்த கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பக்கைக் கண்டு மலேசிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அண்மையில் மதுபானம் மற்றும் 145 வெள்ளி பணத்தை கொள்ளையடித்த
ஒரு திருட்டு வழக்கில் அடுத்த மாதம் திருமணம் புரியவிருந்த ஒரு நபருக்கு தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரம்படியும் விதித்த தீர்ப்பளித்தது.
இந்த இரு வழக்கின் தண்டனைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஈஷா விவகாரத்தில் வன்முறை, ஆபாசம் மற்றும் முரட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறைக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் போலீசார் தங்களின் கடமையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று டத்தோ சிவக்குமார் சொன்னார்.
இந்த 100 வெள்ளி தீர்ப்புக்கு என்ன காரணம் என்று சற்று ஆராயும்பட்சத்தில் ஒரு விஷயம் புலப்பட்டுள்ளது. அது என்னவென்றால் மாஜிஸ்திரேட் தற்போதைய சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறு குற்றச் சட்டம் 1955 (சட்டம் 336) பிரிவு 14ன் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளால் அதே பிரிவின் கீழ் தண்டிக்கப்படலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு, அதாவது 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறு குற்றச் சட்டம் 1955 (சட்டம் 336) பிரிவு 14 இல் வழங்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், அந்த சட்டம் இன்றுவரையில் மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்று டத்தோ சிவக்குமார் தெளிவுபடுத்தினார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட அதே தீர்ப்பு அதாவது 100 வெள்ளி அபராதம் மீண்டும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும், சட்டம் 336 இன் உள்ளடக்கம் மற்றும் பொருத்தத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் இப்போது நேரம் வந்துவிட்டது.
இணையச் பகடிவதை செயல்களுக்கு ஏன் சட்டம் 336ன் கீழ் தண்டனை விதிக்கப்படுகிறது என்று டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.



