
டிக்டாக்கில் தமிழ்மொழியை கண்காணிக்கும் பிரிவு ஏன் அமைக்கப்படவில்லை? டத்தோ சிவக்குமார் கேள்வி
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஜூலை 18-
டிக்டாக்கில் தமிழ்மொழியை கண்காணிக்கும் பிரிவு ஏன் அமைக்கப்படவில்லை என்று டிஎஸ்கே எனப்படும் டைனமிக் சினார் காசே சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தாம் மேற்கொண்ட சில ஆய்வுகளின் வழி தற்போது டிக்டாக்கை கையாளும் மலேசிய நிறுவனம் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் மொழி பெயர்க்கும் வசதியை இயல்பாக கொண்டுள்ளது. ஆனால், தமிழ்மொழிக்கு அந்த வசதி இல்லை என்று தமக்கு தெரியவந்துள்ளதாக டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் டிக்டாக்கில் தமிழ்மொழியை கண்காணிக்கும் பிரிவு ஒன்று இருந்ததாகவும் அது காலப்போக்கில் செயல்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகவும் தமக்கு தெரியவந்துள்ளதாக டத்தோ சிவக்குமார் சொன்னார்.
டிக்டாக்கில் தமிழ்மொழியை மொழிபெயர்க்கும் செயலிகள் இல்லாத காரணத்தினால் நேரலையில் ஈடுபடும் சிலர் கொச்சை வார்த்தைகளை டிக்டாக்கினால் தடைசெய்ய முடியவில்லை என்று டத்தோ என். சிவக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனால் தமிழில் கொச்சை வார்த்தைகளைப் பேசும் வீடியோ பதிவு, நேரலைகளை டிக் டாக்கினால் தடை செய்ய முடியவில்லை.
பொதுபயன்பாட்டிற்கு டிக் டோக் ஒரு நல்ல தளமாகும். இது பல இளம் தொழில்முனைவோருக்கு வருமானத்தை ஈட்டும் தளமாகவும் அமைந்துள்ளது. அதேநேரத்தில் இணையபகடிவதை போன்ற தகாத செயல்களும் இதில் மேற்கொள்ளப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது என்றார் டத்தோ சிவக்குமார்.
இந்த டிக்டாக்கை வயது கட்டுப்பாடு இல்லாமல் பல இளைஞர்களும் சிறார்களும் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். இவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிக்காமல் இருப்பதால் தகாத நடவடிக்கைகளும் இணைய பகடிவதைகளும் தலைவிரித்தாடுவதாக டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
நாம் நவீன காலத்தில் இருப்பதால் பல நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நடப்பில் இருக்கும் தமிழ்மொழி பெயர்ப்பை பயன்படுத்தி பல விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தமிழ் கொச்சை வார்த்தைகள் கொண்ட காணொலிகளை டிக் டாக்கில் தடை செய்யலாம் என்று டத்தோ சிவக்குமார் ஆலோசனை தெரிவித்தார்.
நாட்டில் மற்ற மொழிகளில் பேசப்படும் வீடியோக்கள் அனைத்தும் முறையாக கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்மொழிக்கு மட்டும் எப்போதும் சோதனைதான். 3ஆர் தொடர்புடைய அனைத்து வீடியோக்களும் டிக் டாக்கில் தடை செய்யப்படும் நிலையில் தமிழில் கொச்சை வார்த்தைகளில் பேசப்படும் வீடியோக்களை டிக் டாக் ஏன் தடை செய்யவில்லை என்று டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இணையப் பகடிவதை குறித்து டிக்டாக் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தும் போது
இந்த தமிழ்மொழி விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று டத்தோ ந.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.



