
நகைக் கடைகளுக்கான 2,500 தொழிலாளர்கள் எங்கே? டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேள்வி
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
கிள்ளான்,ஜூலை 21
நாடு தழுவிய நிலையில் இருக்கும் நகைக்கடைகளுக்கு வாக்குறுதி அளித்தப்படி 2,500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.
மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகைக்கடைகளுக்கு இதுவரை 17 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு வந்துள்ளனர். அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய 2,500 தொழிலாளர்களில் 17 பேர் மட்டுமே இதுவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் மற்ற தொழிலாளர்கள் நிலை என்ன என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் 29ஆம் ஆண்டு கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோ அப்துல் ரசூல் அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நகைக்கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளுக்கு ஒவ்வொரு துறைகளுக்கும் 2,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாய்ப்பு வழங்கியிருந்தார். இது பாராட்டத்தக்கது.
ஆனால், அது முழுமை பெறவில்லை. இது தங்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ அப்துல் ரசூல் தெரிவித்தார்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு பணிபுரிய 7,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. நிலைமை இப்படியே போனால் நாங்கள் எப்படி வியாபாரத்தை நடத்துவது என்று டத்தோ அப்துல் ரசூல் கேள்வி கேட்டார்.
இந்த தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றால் இன்னும் பத்து தினங்களில் பிரதமரை நாடி படையெடுக்கு வேண்டிய சூழல் ஏற்படலாம். நகைக்கடைகளுக்கான தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால்
பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும் என்று டத்தோ அப்துல் ரசூல் குறிப்பிட்டுள்ளார்.



