
இந்நாட்டு இந்தியர்களுக்கு கடந்த 60 ஆண்டுகளில் ம.இ.கா செய்தவை என்ன? தைப்பிங் தொகுதி ஆண்டு கூட்டத்தில் தைப்பிங் ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.வீரன் பட்டியல் வெளியீடு
தைப்பிங், ஜூலை 12-
இந்நாட்டில் இந்தியர்கள் தலைநிமிர்ந்து நடக்க கடந்த 60 ஆண்டுகளில் ம.இ.கா செய்த பல திட்டங்கள்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று ம.இ.கா தைப்பிங் தொகுதி தலைவர் திரு.எம்.வீரன் சூளுரைத்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளில் ம.இ.கா என்ன செய்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால., ம.இ.கா செய்த பல விஷயங்களை மறந்து விட்டனர். ம.இ.கா பல விஷயங்களை மேற்கொண்டதால்தான் இந்தியர்கள் நாட்டில் சிறப்பாக வாழ முடிகிறது என்று தைப்பிங் ம.இ.கா தொகுதியின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய பிறகு செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
இந்நாட்டில் தோட்டங்கள் துண்டாடப்பட்டது. அப்போது தோட்டப்புறங்களில் வாழ்ந்த தோட்ட மக்கள் பரிதவித்த போது கலங்கிய அப்போதைய ம.இ.கா தலைவர் துன் சம்பந்தன் பத்து பத்து வெள்ளியாக சேர்ந்து பல தோட்டங்களை வாங்கினார். இந்தியர்களின் குலம் காத்தார். இதனை ம.இ.கா செய்யவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று வீரன் கேள்வி எழுப்பினார்.
அதன் பிறகு நேசா கூட்டுறவு கழகம் ம.இ.கா ஆரம்பித்த இயக்கம். டேஃப் கல்லூரி ம.இ.கா ஆரம்பித்த ஒரு கல்லூரி. கேபிஜே ம.இ.கா ஆரம்பித்த ஒன்று. அமானா இக்தியார் ம.இ.கா பரிந்துரையில் டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில் உருவாக்கப்பட்டது. செடிக் @ மித்ரா ம.இ.கா உருவாக்கியது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று வீரன் கேட்டார்.
அது மட்டுமல்லாமல் துன் சாமிவேலு காலத்தில் மேல்படிப்பு படிக்க சிலமப்படும் மாணவர்களுக்காக 1980களில் MIED அமைக்கப்பட்டது. இந்திய மாணவர்கள் அந்த காலம் தொட்டு உயர்கல்வி படிக்க மெட்டிரிக்குலேஷன் உள்ளிட்ட பல வாய்ப்புகள் கைநழுவி போனதால் துன் சாமிவேலு 500 மில்லியன் செலவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இன்று ஏயம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூலம் 15 ஆயிலத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ம.இ.கா உருவாக்கியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியுமா என்று வீரன் வினவினார்.
ம.இ.கா எனும் பேரியக்கத்தில் முதல் தலைவர் தொடங்கி தற்போதைய 10ஆவது தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வரையில் இந்தியர்கள் நலன் கருதி பல நல்ல திட்டங்களை அமைத்து வெற்றியும் கண்டுள்ளனர். அதுவும் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரின் தலைமைத்துவத்தில் ம.இ.கா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தைப்பிங் தொகுதி ஆண்டு கூட்டத்தில் முன்னதாக உரையாற்றிய போது வீரன் அவ்வாறு தெரிவித்தார்.
ஏயம்ஸ்ட் பல்கலைக்கழகம் கடன் இல்லாத ஒரு பல்கலைக்கழகமாக கொண்டு வந்தவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன். இதற்காக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கும் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ம.இ.காவில் அணி இருந்தது. தற்போது அது முற்றாக அகற்றப்பட்டு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எனும் ஓரணியில் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம். ம.இ.கா தற்போது சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதில் துளியளவும் சந்தேகமில்லை என்று வீரன் சொன்னார்.
இந்த தைப்பிங் தொகுதி ஆண்டு கூட்டத்தை ம.இ.கா மத்திய உறுப்பினர் டத்தோ வே.குணாளன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இதில் சுங்கை சிப்புட் தொகுதி தலைவர் திரு. சின்னராஜு, தைப்பிங் தொகுதி நிரந்தர தலைவர் திரு.மணியம், தொகுதி துணைத்தலைவர் V.ராமன், உதவித் தலைவர் P. முனியாண்டி, செயலாளர் K.துரைசாமி, துணைச்செயலாளர் S.அண்ணாதுரை, பொருளாளர் P.தனபால், தகவல் பிரிவு தலைவர் S.மூர்த்தி, இளைஞர் பிரிவு தலைவர் M.தேவன், S.சந்திரராய்கா, உச்சமன்ற உறுப்பினர்கள் M.ஆசைராஜூ, S.ராசதுறை, V.கனகசெல்வி, P.சரண், A.ஜெயசீலன், கணக்காய்வாளர்கள் M.தீபன், R.ரத்தினம், பேராக் மாநில உச்சமன்ற உறுப்பினர் N.வரதன் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



