Malaysia

அனைத்துலக புலிகள் தினம் காடுகளின் பாதுகாவலன் புலி காக்கப்பட வேண்டும் புலிகள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது! மனிதர்களால் அழிந்துவரும் புலிகளை காப்பாற்றுவோம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பினாங்கு,ஜூலை 29-
100 ஆண்டுகளுக்கு முன்பு வரை புலிகளை கண்டு மனிதன் பயந்து கொண்டிருந்தான்.
ஆனால் அதே 100 ஆண்டுகள் கழித்து புலிகள் மனிதர்களை கண்டு பயந்து கொண்டிருக்கின்றன என சொல்லுகின்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

பரிணாம வளர்ச்சியில் இயற்கையின் அத்தனை அம்சங்களையும் தனதாக்கி கொண்டே வந்த மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக அதனை அழித்து தனக்கு தானே சவக்குழியை நோண்டி கொண்டான்.

தற்போது அழிவின் விழிம்பில் இருப்பது புலிகள் மட்டுமல்ல, அடுத்து வரும் மனித இனமும்தான் என்பதை இன்னும் அவர்கள் உணர்ந்தபாடில்லை என்றார் அவர்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமாக வாழ்ந்து வந்த புலிகள் இன்று சுருங்கி சுருங்கி உலகத்திலேயே 5000த்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
வேட்டையாடுதல், கடத்தல், தோலுக்காக கொலை செய்தல் என பல்வேறு விஷயங்களுக்காக புலிகளை கொன்று கொன்று காடுகளின் பாதுகாவலன் என சொல்லப்படும் புலி இனத்தையே கூண்டோடு வேரறுத்து வைத்திருக்கிறது மனித கூட்டம்.

காடுகளின் உணவு மற்றும் உயிர்சூழற்சியை பாதுகாக்க புலிகளின் இருத்தல் மிக அவசியம்.
ஆனால், இன்றும் புலிகளுக்கு இருக்கும் ஆபத்தின் விளைவாகவும், அவை அழிந்து வரும் மிருகங்களின் பட்டியலில் இருப்பதாலும் பெரும்பாலும் சரணாலயங்களில் வைத்தே பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழும் சுபாவம் கொண்டவை புலிகள். காட்டில் புலி நடந்து சென்றால் அதன் கம்பீரம் தனி அழகுதான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம்.

புலிகளை பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை.

மிடுக்காக சுற்றித்திரியும் புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

வனத்தில் புலி வாழ்கிறது என்றால், அங்கு அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர், பாதுகாப்பு, சுற்றித்திரிவதற்கான பரந்த இடம் இருக்கிறது என்பதை உணரலாம்.

புலிகள் வாழும் வனப்பகுதி செழுமை நிறைந்த காடுகள் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதனால் மனிதன், புலிகள் இடையே மோதல் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
எனவே, வனப்பகுதி அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என, தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ரஷியாவில் 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு நடந்தது. இதில், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் ஜூலை 29-ந் தேதி உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும். மழை, வெயில் காலத்தில் நாம் எப்படி ஒரு குடையின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுபோல் புலிகளை காப்பாற்றினால் அதற்கு கீழ் உள்ள அனைத்து வன விலங்குகளையும் காப்பாற்றுவதாக அமையும் என்பது வனத்துறையினரின் தாரக மந்திரமாகும். எனவே புலிகளை காப்பது வனத்துறையின் கடமை மட்டுமன்று, நாம் ஒவ்வொருவரின் பங்கும் அதில் இருக்க வேண்டும். நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் புலிகள் தினத்தை கொண்டாடுவோம். புலிகளை காப்போம்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி தோராயமாக உலகம் முழுவதும் 4500 புலிகள் மட்டுமே உயிர் வாழ்ந்து வருகின்றன. அழிந்து வரும் இந்த மிருக இனத்தை பாதுகாக்கவே சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச புலிகள் தினம்
2010ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புலிகள் பாதுகாப்பு மாநாட்டில் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச புலிகள் தினம் கடைபிடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 13 புலிகள் வாழ் நாடுகளும் ஏனைய உறுப்பு நாடுகளும் என பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டன.

அதன்படி, 2022ம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. சர்வதேச புலிகள் தினம் 2023
சர்வதேச புலிகள் தினத்தில் அதன் முக்கியத்துவம், பூகோள ரீதியான அவசியம், அவற்றை வேட்டையாதவதை தடுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளாலும் முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக புலிகள் வாழும் இடத்தில் மனிதர்களின் அமைவிடங்களை ஏற்படுத்த கூடாது என்பதும் அதில் முக்கியமான ஒன்று.

புலிகளின் வாழ்வியலை மேம்படுத்தி, இனப்பெருக்கம் மூலம் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

இந்தியாவும் புலிகளும்
தற்போதைய நிலவரப்படி உலகில் வாழும் புலிகளில் 85 சதவீதத்திற்கும் மேல் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகின்றன.
என்னதான் புலிகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் இன்னும் அவற்றை வேட்டையாடுவதும், சட்டவிரோதமாக கொலை செய்வதும் நின்ற பாடில்லை.

இதில் காடுகளின் அழிவும், மலைப்பகுதிகளில் நடக்கும் குடியமர்வும் அவற்றை உணவுக்காக, உறைவிடத்துக்காக மக்கள் பகுதியை நோக்கி தள்ளுகிறது.

இதனால், மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இயற்கை விதியின்படி மனிதன் வாழ வேண்டுமென்றால், உயிரினங்கள் வாழ வேண்டும்.

மரங்கள், காடுகள் , ஆறுகள் என எல்லாம் வாழ வேண்டும். அதில் முதன்மையானவை புலிகள். எனவே , உடனடியாக காட்டு வளங்களை சுரண்டுவதற்காக காடுகள் சூறையாடப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காடுகளை பாதுகாக்க வேண்டும்.

அதில் வாழும் புலிகளை எந்த வித தொந்தரவும் இல்லாமல் வாழ விட வேண்டும். அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்களும், அரசாங்கங்ககும் செய்ய வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button