
மலேசிய இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் இடைநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்து சமய வகுப்புகள் மலேசிய இந்து சங்கம் தலைவர் தங்க கணேசன் கோரிக்கை
பண்டார் சௌஜானா புத்ரா,ஜூலை 21-
மலேசிய இந்து சங்கத்தில் இருந்த பிளவுகள் எல்லாம் களைந்து எல்லோரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று அதன் தலைவர் தங்க கணேசன் கூறினார்.
நாம் அனைவரும் ஒன்றிணையவில்லை என்றால் மலேசிய இந்து சங்கம் காணாமல் போய்விடும். இருந்தாலும் இன்னும் ஒரு சிலர் அதிருப்தியாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக நம்முடன் இணைவார்கள் என்று
மலேசிய இந்து சங்கத்தின் 47ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தங்க கணேசன் அவ்வாறு தெரிவித்தார்.
நமது நாட்டில் இந்து சமயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் நமது மாணவர்களுக்கு இந்து சமய வகுப்புகளை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலைப் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்து சமய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல முறை முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று தங்க கணேசன் சொன்னார்.
இந்து சமயம் குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு எதிராக மலேசிய இந்து சங்கம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இந்த விவகாரத்தில் சங்கம் எந்தவொரு சமரசத்தையும் காணாது.
நாட்டில் பல ஆலயங்களில் திருவிழாவும் இரத ஊர்வலமும் சமய நெறியை மீறி நடந்துக் கொண்டிருக்கிறது.
அதே போன்று அந்நிய நாட்டு அர்ச்சகர்களின் ஒழுக்கக்கேடான செயல்களும் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று தங்க கணேசன் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களும் சமய சேவை மையங்களாக மாற வேண்டும். அனைத்து ஆலயங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாகவே இந்து சமயத்தையும் வளர்க்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று தங்க கணேசன் மேலும் சொன்னார்.



