
ஜொகூர்பாரு மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா 2024
ஜொகூர்,ஆக.3-
செம்மொழியாக மகுடம் சூடப்பட்ட நம் தாய்மொழிக்கு அண்மையில் தேசிய வகை ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஜொகூர்பாரு மாவட்ட அளவிலான செந்தமிழ் விழாவில் புகழாரம் சூடப்பட்டது.
ரினி தமிழ்ப்பள்ளியில் மேளதாள இசையோடு கரகாட்டமும் களைக்கட்ட செம்மொழி விழா மிகக் கோலாகலமாகத் தொடங்கியது. கல்வி அமைச்சின் கீழ் ஜொகூர் மாநில கல்வி இலாகாவோடு ஜொகூர் பாரு மாவட்ட தலைமையாசிரியர் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழாவில் ஜொகூர் பாரு மாவட்டத்தைப் பிரதிநிதித்து ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி, துன் அமீனா தமிழ்ப்பள்ளி, ஜாலான் யாயா ஹவால் தமிழ்ப்பள்ளி, கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி மற்றும் புக்கிட் சிரம்பாங் தமிழ்ப்பள்ளி ஆகியவை கலந்து சிறப்பித்தன.

இந்நிகழ்வில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த டத்தின் இந்துமதி செல்வம் மொழியை வளர்ப்பதில் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பைப் பாராட்டியதோடு ஜொகூர் பாரு மாவட்ட தலைமையாசிரியர் மன்றத்திற்கு 1000 வெள்ளி நன்கொடையாக வழங்கினார்
இந்நிகழ்வுக்குச் சிறப்பு வருகையளித்த ஜொகூர் மாநில கல்வி இலாகாவின் பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளின் உதவி இயக்குநர் திருவாளர் இரவிச்சந்திரன் இராமச்சந்திரன் மாணவர்களின் திறமைக்குச் சவால்விடும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவர் பங்களிப்பினை வெகுவாகப் பாராட்டியதோடு கரகாட்டம், நாதஸ்வர மேளதாளம், சிலம்பம் மற்றும் பரதமென கலாசார மிளிர்வோடு நடைபெற்ற இன்றைய நிகழ்வினைக் கண்டு மெய்சிலிர்த்ததாகக் கூறினார்.
திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் என மூன்று போட்டிகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட இவ்விழாவில் இவ்வருடம் முதல் முயற்சியாக இம்மூன்று போட்டிகளில் இரண்டாம் சுற்று இணைக்கப்பட்டு மாணவர்களின் சுய சிந்தனையாற்றலுக்கும் படைப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் நடத்தப்பட்டது.

புதிய முயற்சியாக இருந்தாலும் தங்களால் சாதனை படைக்க முடியுமென நிரூபித்து மூன்று போட்டிகளிலும் முதலாம், இரண்டாம் நிலைகளைத் தக்க வைத்துக் கொண்ட துன் அமீனா தமிழ்ப்பள்ளி மற்றும் ஜாலான் யாயா ஹவால் தமிழ்ப்பள்ளியோடு மற்ற பள்ளிகளும் அடுத்த மூன்று நிலைகளைக் கைப்பற்றி இன்றைய நிகழ்விற்குப் பெருமை சேர்த்தன.
மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி இணைப்பாடங்களிலும் சிறந்து விளங்க வேண்டியது அவசியமான ஒன்றெனக் கூறிய ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி செம்மொழி விழா எவ்விதத் தங்குத்தடையுமின்றி சிறப்புடன் நடைபெற உதவிக்கரம் நீட்டிய ஜொகூர்பாரு மாவட்ட தலைமையாசிரியர் மன்றத்திற்கும், தலைமையாசிரியர்கள், துணைத்தலைமையாசிரியர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.நா.சுரேஷ் மற்றும் அவர்தம் செயலவையினருக்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி மலர்களை உளமார அர்பணித்துக் கொண்டார்.



