
இந்திய இளைஞர்கள் நமது பாரம்பரிய தொழில்களை மீட்டெடுக்கப்பட வேண்டும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள்
கோலாலம்பூர், ஆக.23-
இந்திய இளைஞர்கள்; நமது பாரம்பரிய தொழில்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியர்கள் சார்ந்த பாரம்பரிய தொழில் ஒரு காலக்கட்டத்தில் நம்மிடையே இருந்துள்ளது. இதில் குறிப்பாக முடி வெட்டுவது, சலவை உள்ளிட்ட பல தொழில்கள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது இத்தொழில்களில் மற்ற பல சமூகத்தினர் ஆக்கிரமித்து விட்டதாக ம.இ.கா தலைமையகத்தில் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக 96 மணி நேரம் இடைவிடாமல் முடிதிருத்தும் தாஸ் முடிதிருத்தும் அகாடமி முயற்சியை தொடக்கி வைத்த போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.
இத்தொழில்களை அவர்கள் நவீனத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நமது பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டும். இதனை இந்திய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
தாஸ் முடித்திருத்தும் அகாடமி மஇகா இளைஞர், புத்ரா பிரிவுடன் இணைந்து முடி திருத்தும் முயற்சியை தொடங்கியுள்ளது பாராட்டத்தக்கது.
அடுத்த 96 மணி நேரத்திற்கு இடைவிடாமல் அவர்கள் முடி வெட்டவுள்ளனர். இதன் வழி மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடிப்பது அவர்களின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இந்த முயற்சியானது இத்துறையில் அதிகமான இந்திய இளைஞர்கள் கால்பதிப்பதற்கு ஊக்குவிக்கிறது. இம்முயற்சியில் இறங்கியுள்ள தாஸ் அகாடமி உட்பட அனைத்து தரப்பினருக்கும் டத்தோஸ்ரீ சரவணன் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
மஇகா இளைஞர் பிரிவு, புத்ரா பிரிவு போன்றவை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இது போன்ற முயற்சிகள் இந்திய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதுடன் சொந்த தொழில் செய்வதையும் இளைஞர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் மேலும் சொன்னார்.



