
ஒரு பிடி மண்ணுடன் தாயகம் திரும்பிய விஜயலட்சுமியின் குடும்பத்தினர் இந்து முறைப்படி எளியான சடங்குகள் செய்து மனஇறுக்கத்துடன் தாயகம் புறப்பட்டனர்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,செப்.1-
மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் புதையுண்டு காணாமல் போன விஜயலட்சுமி இனி கிடைக்க மாட்டார் என்ற நிலையில் விதியென்று ஏற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் நேற்று இரவு இந்தியா,ஆந்திரா புறப்பட்டனர்.

இந்தியா திரும்புவதற்கு முன் விஜயலட்சுமியின் கணவர், மகன், மகள் மற்றும் உறவினர்கள் விஜயலட்சுமி விழுந்த இடத்தில் இந்து முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தினர். அங்கு அவர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து விஜயலட்சுமியின் மகன் ஒரு பிடி மண்ணை எடுத்து பிளாஸ்டிக் பைபில் போட்டு இந்தியாவுக்கு எடுத்துச் சென்றனர்.
கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி காலை 8.20 மணியளவில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட நில அமிழ்வில் எட்டு மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பரிதாபமாக விழுந்த விஜயலட்சுமி 9 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. சாக்கடையில் விழுந்த அவர் மூச்சுதிணறி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் உட்பட பல தேடுதல் முயற்சிகள் இருந்தும், தேடல் மற்றும் மீட்புக் குழுவால் விஜயலட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா ஒன்பது நாட்கள் நடந்த தேடும் முயற்சியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் விஜயலட்சுமியின் குடும்பத்தினர் இந்தியா திரும்புவதற்கு முன்னர் அந்த இடத்தில் இறுதி மத சடங்குகளை நடத்தினர். விஜயலட்சுமியின் கணவர், மகன் மற்றும் சகோதரி ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து சடங்குகளைச் செய்தனர். அவர்கள் எண்ணெய் விளக்குகளை ஏற்றி, மணி அடித்தனர். அதன்பிறகு அவரது மகன் ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தார். அதனை அவர்கள்
இந்தியாவுக்கு எடுத்துச் சென்றனர்.
விஜயலட்சுமியின் குடும்பத்தினர் நேற்று செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு குடும்பத்துடன் இந்தியா புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



