Short News

மஇகாவின் எதிர்காலம் கருதி புது நியமனங்கள் கட்சியினர் அனைவரும் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறைகூவல்

கோலாலம்பூர், அக்.10-
நாட்டின் பாரம்பரிய-மூத்த அரசியல் கட்சியான மஇகா-வின் 77-ஆவது தேசியப் பேராளர் மாநாடு அண்மையில் (செப்டம்பர் 15-இல்) நடைபெற்றதன் தொடர்பில் கட்சியின் முக்கியமான பொறுப்புகளுக்கு தேர்தல்வழி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கட்டொழுங்கிற்கும் சீரான செயல்பாட்டிற்கும் பெயர்பெற்ற மஇகா-வில் அனைத்து நடவடிக்கைகளும் செம்மையாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்பொழுது நியமனப் பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் கட்சியினருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மஇகா தேசியப் பொருளாளராக இதுவரை கடமையாற்றிவந்த தான்ஸ்ரீ இராமசாமி, தேசிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மஇகா தேசிய பொதுச் செயலாளராக டத்தோ ஆனந்தனும் நிர்வாகச் செயலராக டத்தோ டாக்டர் ஏ.டி.கே. ராஜாவும் ஏற்கெனவே மத்திய செயலவையில் நியமிக்கப்பட்டனர்; இவ்விரு பதவிகளும் மறுஉறுதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேசியப் பொருளராக டத்தோ ந.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்
கட்சியின் தேசிய தகவல் பிரிவிற்கு டத்தோ ஏ.கே. இராமலிங்கமும் காலம்கருதி புதிதாக கட்டமைக்கப்பட்ட மஇகா தேசிய ஊடகப் பிரிவிற்கு எல். சிவசுப்பிரமணியமும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மஇகா கட்டடக் குழுத் தலைவராக டத்தோ என்.ரவிச்சந்திரன் நியமனம் பெற்றுள்ள வேளையில், தகவல் பிரிவிற்கு இதுவரை பொறுப்பேற்றிருந்த டத்தோ இரா.தினாளன் கட்சியின் தேசிய வியூக அதிகாரியாகவும் அமைப்புச் செயலாளராக டத்தோ ந.முனியாண்டியும் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

2024-2027 தவணைக்கான தேசியத் தலைவரும் தேசியத் துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், புதிய உதவித் தலைவர்களாக டத்தோ அசோகன், டத்தோ த. முருகையா, டத்தோ செனட்டர் நெல்சன் ரெங்கநாதன் ஆகியோர் மஇகா தேசியப் பேராளர்களால் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தை கட்சியினரும் சமுதாயமும் அறியும்.

இரு நியமன உதவித் தலைவர்களில் இன்னொருவராக டத்தோஸ்ரீ சா. வேள்பாரி தொடர்கிறார். இதற்கிடையில், மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராக அரவிந்த் கிருஷ்ணன், மகளிர்த் தலைவராக சரஸ்வதி நல்லத்தம்பி, புத்ரி பிரிவித் தலைவராக செல்வி தீபா சோலைமலை, புத்ரா தலைவராக டாக்டர் சதீஷ் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மலேசிய இந்திய சமுதாயத்தின் தாய்க் கட்சியான மஇகாவில், 2024-2027 தவணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கி, கட்சி அடுத்தப் பரிமாணத்தை எட்டுவதற்கு மஇகாவினர் துணை நிற்கும்படி கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய நிலையில் கட்சிக்கு இரண்டு இலக்குகள் முக்கியமாக உள்ளன. வருகின்ற 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், நாம் குறிப்பிடத்தக்க வெற்றியை நிலைநாட்ட வேண்டும்; இதற்கிடையில், நாம் புதிய கட்டடப் பணியைத் தொடங்கி அதை நல்லமுறையில் நிறைவேற்ற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசிய இந்திய சமுதாயத்தை பல வகையாலும் தற்காக்க வேண்டிய பெருங்கடமை நம் கைகளில் இருப்பதால், கட்சியின் தேசியத் தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கும்படி கட்சியினரை மீண்டும் கேட்டுக் கொள்வதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button