இந்திய சமுதாய பிலச்சினைகளுக்கு சண்முகம் மூக்கண் என்ன நடவடிக்கை எடுத்தார்? புண்ணியம் இல்லாத அதிகாரி சிவசுப்ரமணியம் சாடல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,அக்.2-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி சண்முகம் ஒரு புண்ணியம் இல்லாத சிறப்பு அதிகாரி என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் வர்ணித்துள்ளார்.
இந்தியர்கள் சார்ந்த பல பிரச்சினைகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், ஒரு ஆலயத்தில் பிரதமர் துறையின் ஆதரவுடன் அன்னதானம் வழங்கி வருகிறார். ஆனால் மற்ற பிரச்சினைகள் குறித்து சண்முகம் மூக்கன் கவனம் செலுத்தவில்லை என்று சிவசுப்ரமணியம் சாடினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னனி இடம்பெற்றுள்ளது. ஆனால, தேசிய முன்னனி உறுப்புக் கட்சியாக இருக்கும் ம.இ.கா எந்த பதவியையும் வகிக்கவில்லை. இந்நிலையில் பல பிரச்சினைகள் ம.இ.கா பார்வைக்கு கொண்டு வரப்படுவது ம.இ.கா மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாக சிவசுப்ரமணியம் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், சண்முகத்தை ஏன் சிறப்பு அதிகாரி பதவிக்கு நியமித்தார் என்பது அவருக்கு புரியவில்லை போலும். இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிக்கவே சண்முகம் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவர் தன் வேலையை சரியாக செய்கிறாரா என்று சிவசுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.
பத்துகேவ்ஸ், இந்தியன் செட்டில்மண்ட் பிரச்சினை அண்மைய காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள் ஆவர். அதை ஏன் கவனிக்கவில்லை? இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் கடமை?
நாட்டில் இந்திய மாணவர்களின் மெட்ரிக்குலேசன் பிரச்சினை தீராத ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு சண்முகன் மூக்கன் என்ன நடவடிக்கை எடுத்தார்?
பிரதமர் துறையில் ஓராண்டு காலம் பணியாற்றும் நீங்கள் அங்கு மூன்று அதிகாரிகள் இருப்பதாக கூறியிருந்தீர்கள். முதலில் 3 அதிகாரிகள் போதுமானவர்களா? மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உங்களுக்கு தகுதி இல்லையா? அல்லது ஆற்றல் இல்லையா? அந்த அதிகாரத்தை பிரதமர் உங்களுக்கு வழங்கவில்லையா?
நாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 29 அமைச்சுகளில் எத்தனை இந்திய சிறப்பு அதிகாரிகள். இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை தாங்கள் செய்தீர்களா? அந்த எண்ணிக்கையை நீங்கள் கண்காணித்தீர்களா?
இந்திய சமுதாயத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் ஒன்று சேர்த்திர்களா? நடவடிக்கை எடுத்தீர்களா?
இதில் குறிப்பாக மருத்துவ பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் குத்தகை அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அவர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவதற்கு உங்களின் நடவடிக்கை என்ன? எத்தனை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளது? இதில் குறிப்பாக மெட்ரிக்குலேசன் நுழைவு எப்படி இருக்கிறது? ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இந்திய பட்டதாரிகள் எண்ணிக்கை எவ்வளவு? இதில் உங்களின் நடவடிக்கை என்ன? என்று சிவசுப்ரமணியம் சரமரியாக கேள்வி் கணைகளை தொடுத்துள்ளார்.
பிரதமர் நல்ல நோக்கத்திற்காக உங்களை நியமித்துள்ளார். இதில் மேற்கண்ட பல பிரச்சினைகளை கவனிக்க வேண்டியது உங்கள் கடமை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா சிபாரிசில் பிரதமர் துறைக்கு வந்த நீங்கள் இந்திய சமுதாயத திற்கான உங்கள் கடமைகளை செய்தீர்களா?
ஆனால், நீங்கள் B40 மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் ஆலயங்களில் சனிக்கிழமைதோறும் பிரதமர் துறையின் ஆதரவுடன் அன்னதானம் போடுகிறீர்கள். அது தவறல்ல. திருவிழா காலங்களில் அன்னதானம் நடக்கும். ஆனால், மக்கள் பிரச்சினைகளை கவனிப்பது யார்? சண்முகம் மூக்கண் பதில் சொல்வாரா?



