
குடியிருப்பு பகுதியில் உரிமம் இல்லாத உணவகம் செயலால் பொதுமக்கள் அவதி டத்தோ பண்டார் ஈப்போ தீர்வு காண்பாரா?
ஈப்போ, அக். 3: இங்குள்ள கேனிங் கார்டனில் ஜாலான் பப்பானில் முதல் வீடு ஒன்று சீரமைப்பு செய்யப்பட்டு உணவகமாக( கோப்பே) கடந்தாண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது என்று இங்குள்ள குடியிருப்பாளர்களின் பிரதியிதியான ரமேனேஸ்வரன் சுந்தரம் புகார் செய்தார்.

இந்த உணவகம் திறந்த நாள் முதல் இன்று வரை இங்குள்ள 100 வீட்டின் உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவற்றில் முதன்மையானது இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை வீட்டின் முன் புறத்தில் அவர்களின் விருப்பம் போல நிறுத்தி விட்டு செல்வதாகும். இதனால், இங்குள்ள குடியிருப்பாளர்கள் உணவக உரிமையாளரிடம் பலமுறை புகார் செய்தும் பயனில்லாமல் போயிற்று. ஆபத்து அவசர வேளைகளில் தங்களின் காரை வீட்டு வளாகத்திலிருந்து வெளியேற்ற பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை அவர் வருத்சமாக கூறினார்.
குறிப்பாக, இங்கு செயல்படும் இந்த உணவகத்திற்கு உரிமம்( லைசன்ஸ்) கிடையாது. அப்படியிருக்கையில், ஈப்போ மாநகர் மன்றம் எவ்வாறு இந்த உணவக உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்விவகாரத்தில், ஈப்போ மேயருடன் இருமுறை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் இறுதிக்கூட்டம் இன்று( 4.10.2024) ல் நடைபெறவுள்ளது. இவ்வேளையில் பொதுமக்களுக்கு சாதகமாக இத்தீர்ப்பு அல்லது முடிவு அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்கு அதிகமான கார் வந்து செல்வதால் இங்குள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்வி குறியானது. ஒரு சமயத்தில் மாலை வேளையில் வீட்டின் முன்புற சாலைகளில் சிறார்கள் மிதிவண்டி ஓட்இ செல்வது வழக்கமாக இருந்து வந்த து. அதோடு முதியோர்கள் மூத்த குடிகள் சாலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால், தற்போதைய சூழலால் அவை அனைத்தும் அச்சுறுத்தலால் செய்ய இயலாமல் போய் விட்டது என்று அவர் தெரிவித்தார்.
இந்த உணவக சாலையை 5 சிறிய சாலைகள் இணைந்துள்ளன. இதனால் இந்த சாலையை முதன்மை சாலையாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அவசர வேளைகளில் தீயணைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் அம்புலன்ஸ் அவசர உதவி பிரிவினர் செயல்பட பல சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையால், இவ்விவகாரம் தீர்வு காண வேண்டுமென்றால் இந்த உணவகத்தை முற்றாக அப்புறப்படுத்த வேண்டும். அதனை ஈப்போ மாநகர் மன்றத்தினர் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



